Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாராஷ்டிராவிலிருந்து 1000 கி.மீ. நடைபயணமாக திருச்சி வந்து சேர்ந்த இளைஞர்கள்: சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

ஏப்ரல் 05, 2020 08:04

திருச்சி: ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதால் வட மாநிலத்திலிருந்து 1000 கி.மீ. நடைபயணம் மேற்கொண்ட இளைஞர்கள் 7 பேர் திருச்சி வந்தனர். ஆட்சியரின் உதவியுடன் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதனால் வட மாநிலங்களில் பணிபுரிந்து வரும் தமிழக இளைஞர்கள் பலரும் போக்குவரத்து வசதியின்மையால் தமிழகத்துக்கு வர இயலவில்லை.

இந்நிலையில் 1000 கி.மீ. தூரம் நடைபயணமாக திருச்சி வந்த 7 இளைஞர்களை வழிமறித்த சமூக ஆர்வலர்கள் ஆட்சியரின் உதவியுடன் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சோலாப்பூரிலிருந்து திருச்சி வந்த இளைஞர்கள் ராகுல் உள்ளிட்டோர் கூறியது; ஊரடங்கு உத்தரவை அடுத்து கடந்த 29ம் தேதி சோலாப்பூரில் இருந்து நடைபயணமாக சாலை மார்க்கத்தில் புறப்பட்டோம்.

வழியில் கிடைக்கும் உணவு, குடிசைப் பகுதிகளில் இரவு தங்கியிருந்தும் அத்தியாவசிய பொருள்களை ஏற்றி வரும் கனரக வாகனங்களின் உதவி மூலம் சில நூறு கி.மீ. தூரம் பயணித்து மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநில எல்லைகளை கடந்து முசிறி வந்தோம்.

அதன்பிறகு சொந்த ஊர்களான நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளுக்கு செல்ல திருச்சி வந்தடைந்தோம். திருச்சியில் ஆட்சியர், சமூக ஆர்வலர்கள் செய்த உதவி மூலம் தற்போது சொந்த ஊர்களுக்கு உரிய வாகனங்களில் செல்ல இருக்கிறோம். 

1000 கி.மீ. தூரம் கடினமாக பயணித்து இறுதியாக சொந்த ஊருக்கு செல்கிறோம் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு வேலை பறிபோகாது என உரிமையாளர் உறுதி அளித்துள்ளார். ஊரடங்கு முடிந்தவுடன் மீண்டும் சோலாப்பூர் செல்வோம் என்றனர்.

தலைப்புச்செய்திகள்