Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீடுகளில் விளக்கு ஏற்றுவார்களா தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள்?

ஏப்ரல் 05, 2020 12:01

சென்னை: கொரோனாவுக்கு எதிராக ஒற்றுமையுடன் போராடுவதை காட்டவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மக்கள் அனைவரும் இன்று (ஏப்.5) இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு, தீபங்களையும் மெழுகுவர்த்திகளையும் மொபைல் போன்களையும் ஒளிர விட வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. மனிதர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க இந்தியாவில் ஊரடங்ககை கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதற்கிடையே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் மக்களின் ஒற்றுமையை காட்டுவதற்காகவும் இருள் சூழ்ந்த நாட்டில் ஒளியை பரப்புவதற்காகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இன்று இரவு ஒன்பது மணிக்கு அனைவரது வீட்டிலும் விளக்குகளை ஒளிரவிட வேண்டுமாறு கேட்டுக்கொண்டார். இதில் அனைவரின் எதிர்பார்ப்பு. திமுக தலைவர் ஸ்டாலின், அவரது சகோதரி கனிமொழி மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான்.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: பொதுவாக திமுக தலைவர்களுக்கும் மற்றும் சில எதிர்க் கட்சித் தலைவர்களுக்கும் இந்துமத சடங்குகளின் மீது நம்பிக்கை கிடையாது. எப்போதும் நையாண்டி செய்து கொண்டிருப்பர். கொரோனா விஷயத்தில் மோடியின் வேண்டுகோளை இவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என தெரியவில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக எடுத்த எடுப்பிலேயே ஊரடங்கு பின்பற்றப்பட வேண்டும் என அறிவித்தார் மோடி. இந்தியா போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த நாட்டில் ஊரடங்கை அறிவித்து அதை வெற்றிகரமாக மக்களை பின்பற்ற வைத்ததற்கு மோடியை உலக நாடுகள் பாராட்டுகின்றன. ஆச்சரியம் தெரிவிக்கின்றன.

இதுபோக, கொரோனாவை எதிர்த்துப் போராட மாநிலங்களுக்கு நிதி. மருத்துவம், உபகரணங்கள் போன்றவற்றையும் வழங்கி உள்ளார் மோடி. தினமும் பல்வேறு துறைகளை சேர்ந்த 200 பேருடன் வீடியோ கான்பரன்சிங்கில் பேசி வருகிறார். அதாவது, அறிவியல்பூர்வமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு வார் ரூம் அமைத்து பணிபுரிந்து வருகிறார்.

ஏற்கனவே துாத்துக்குடி பிரச்னையில் மெழுகுவர்த்தியை ஏற்றியவர்கள் தான் இந்த ஸ்டாலினும் கனிமொழியும். இது ஒருபுறம் இருக்க, மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தவும், பய உணர்வை போக்கவும் தான் வீடுகளில் விளக்கு ஏற்ற சொல்கிறார் மோடி. அவர் விடுத்த அழைப்பு, கொரோனாவிற்கு எதிரான போரில் நாம் வெல்ல வேண்டும் என்பதையே குறிக்கும். இதில் வேறு எந்த மத பழக்க வழக்கமும் இல்லை. 

இப்படி இருக்க, வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற மோடியின் அழைப்பை திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள். மோடியை ஒரு கட்சியின் தலைவராக பார்ப்பார்களா அல்லது இந்திய பிரதமர் என்ற முறையில் அவரது அழைப்புக்கு மரியாதை கொடுப்பார்களா என்பதுதான் இப்போதைய கேள்வி.

தலைப்புச்செய்திகள்