Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரையில் திடீர் ரெயில் தண்டவாளம் அருகே குண்டு வெடிப்பு

மார்ச் 09, 2019 06:37

மதுரை: ரெயில் தண்டவாளம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாசவேலைக்கு செயல் திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மதுரையில் இருந்து போடிக்கு அகல ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. 

மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து நகரில் உள்ள பழங்காநத்தம், வசந்தநகரில் உள்ள மகாலட்சுமி நகர், மீனாட்சி மில் காலனி, போடி லைன் ஆகிய பகுதிகள் வழியாக ரெயில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. 

ரெயில்கள் இயக்கப்படாததால் தண்டவாளம் அருகே ஜல்லி கற்களும், இரும்பு கர்டர்களும் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் ஆள் நடமாட்டமும் இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக தண்டவாளத்தை ஒட்டியுள்ள பகுதிகள் அமைந்துள்ளது. 

இன்று அதிகாலை மகாலட்சுமி நகர் அருகே உள்ள தண்டவாளம் பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

தொடர்ந்து வெடிகுண்டு, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு சிதறிக் கிடந்த வெடிகுண்டு துகள்களை சேகரித்தனர். மோப்ப நாய் கொண்டு துப்பு துலக்கப்பட்டது. விசாரணையில், வெடித்தது நாட்டு வெடிகுண்டு என தெரியவந்தது. 

குண்டு வெடித்த இடத்தில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகம் காணப்படும். எனவே அவர்கள் யாரேனும் நாட்டு வெடிகுண்டை வைத்து விட்டுச் சென்றார்களா? அல்லது வேறு இடத்தில் நாசவேலைக்கு பயன் படுத்துவதற்காக இங்கு நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்துவிட்டுச் சென்றார்களா? இதில் ஈடுபட்டது யார்? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி மதுரைக்கு வரும்போது திருமங்கலம் அருகே பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நகரில் வெடிகுண்டு வெடித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தலைப்புச்செய்திகள்