Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி ஆழ்வார்தோப்புக்குள் வெளிநபர்கள் நுழையத் தடை

ஏப்ரல் 06, 2020 07:53

திருச்சி: திருச்சியில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் வசித்து வரும் பகுதிகளைத் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்று வந்தவர்களில் 120 பேர் திருச்சி மகாத்மாகாந்தி நினைவுஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 53 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில் 17 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 36 பேருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்ட 17 பேர் வசிக்கும் வீடுகள் சுற்றியுள்ள வீடுகள் மற்றும் நடமாடும் பகுதிகளைத் தனிமைப்படுத்தி தீவிர தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அந்த இடங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி திருச்சி மாநகராட்சியில் உறையூர், கண்டோன்மென்ட், தில்லைநகர், பாலக்கரை, பீமநகர், தென்னூர், அண்ணாநகர், ஆழ்வார்தோப்பு, ரகுமானியபுரம் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் என அறிவிப்பு வெளியிடப்பட்டு அங்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முசிறி, மணப்பாறை, மண்ணச்சநல்லூர், லால்குடி, துவாக்குடி போன்ற நகரங்களிலும் ஒரு சில பகுதிகளைத் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 50 இடங்களை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து அந்தந்த தெருக்களின் அனைத்து நுழைவு வாயில்களிலும் தடுப்புக் கட்டைகள் இரும்புத் தடுப்புகள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் வசிப்போர் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளுக்கு வெளிநபர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 இடங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுமட்டுமின்றி இந்த தெருக்கள் முழுமையாக கிருமி நாசினி மருந்து தெளித்து சாலையின் இருபுறமும் பிளீச்சிங் பவுடர் தூவி துப்புரவுப் பணியாளர்கள் மூலம் தினமும் தூய்மைப்படுத்தப்படுகிறது. இப்பகுதிகளில் வசிக்கும் வீடுகளிலுள்ள நபர்கள் நாள்தோறும் இருமுறை மருத்துவக் கண்காணிப்புக்குள்படுத்தப்படுகின்றனர். 

காலை 7 மணி இரவு 7 மணி என இருவேளைகளும் கண்காணித்து யாருக்கேனும் உபாதைகள் இருந்தாலோ கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தாலோ உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பகுதிகளிலுள்ள 25586 வீடுகளை மருத்துவக் குழுவினர் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்