Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் வரும் 1 லட்சம் துரித ஆய்வு கருவிகள்: 30 நிமிடத்தில் ரிசல்ட்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

ஏப்ரல் 07, 2020 06:44

சென்னை: “கொரோனாவுக்கான துரித ஆய்வு உபகரணங்கள் ஒரு லட்சம் எண்ணிக்கையில், வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உரிய ஆய்வு கருவி கிடைத்ததும் 30 நிமிடங்களில் பரிசோதனை முடிவு வெளியாகிவிடும்,” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா ஆய்வகங்கள் எண்ணிக்கை 17 ஆக, இருக்கிறது. மேலும் 21 ஆய்வகங்கள் துவங்கப்பட உள்ளன. மத்திய அரசு அனுமதி கொடுத்ததும் 38 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்படப் போகிறது. இதுவரை 4,612 பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 571 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருக்கின்றன.

தேவையான முகக் கவசங்கள், மருத்துவ உபகரணங்கள், தேவையான அளவுக்கு இருப்பில் உள்ளன. கூடுதலாக 2,500 வென்டிலேட்டர் வாங்குவதற்கு இன்று (நேற்று) கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. உரிய ஆய்வு உபகரணங்கள் ஒரு லட்சம் எண்ணிக்கையில், வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆய்வு கருவி கிடைத்ததும் 30 நிமிடங்களில் பரிசோதனை முடிவு வெளியாகிவிடும். அதன் பிறகு வேக வேகமாக பரிசோதனை முடிவுகள் வெளியாகும். சீனாவில் இருந்து இந்த உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனைகள் வேகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகள், உணவு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. நானே நேரடியாக சென்று உதவிகளை பார்வையிட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். வேறு மாநிலங்களில் சிக்கித்தவித்த தமிழர்களுக்கு உரிய உதவிகள் செய்து தர வேண்டும் என்பதை அந்தந்த மாநில முதல்வர்களை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். தமிழகத்தில், 268 முகாம்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்