Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தொற்று உள்ளவர் மீது அரசு எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை: அமைச்சர் கடம்பூர் செ ராஜூ

ஏப்ரல் 07, 2020 07:08

தூத்துக்குடி: கொரோனா தொற்று உள்ளவர் மீது அரசு எந்த பாகுபாடும் பார்க்காமல், மனிதாபிமானத்துடன் செயல்பட்டு நோய் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுபட தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூரணி ஊராட்சி சிந்தாமணி நகர், பாண்டவர்மங்கலம் ஊராட்சி ராஜூவ் நகர் ஆகிய பகுதிகளில் கரோனா வைரஸ் தடுப்தற்காக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை துவக்கி வைத்து, தாமே கிருமி நாசினிகளை தெளித்தார். இந்நிகழ்சியில், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து, கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோவில் அருகில் முதியோர்களுக்கு உணவு வழங்கினார். 

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் தமது சொந்த நிதியிலிருந்து 31 திருநங்கைகளுக்கு தலா ரூ.1,000/- வீதம், 31,000/-ம் நிதியுதவி வழங்கினார். பின்னர், கிழவிபட்டியில் சமைக்க முடியாத முதியோர்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் , உணவு வழங்குவதை தொடங்கி வைத்தார். மேலும், நரிக்குறவர் காலனியில், பொது மக்களுக்கு, காய்கறி பைகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம் உட்பட அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 

கொரானோ வைரஸை பரவுதலை தடுப்பதற்காக, உலகளாவிய மக்கள் நலனை காப்பதற்காக உலக நாடுகள் எல்லாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நமது நாட்டிலும், மக்கள் சுய ஊரடங்கு உத்தரவினை 21 நாட்கள் இந்திய அரசு அறிவித்துள்ளது. சுய ஊரடங்கின் மூலம் எந்த வகையில் எல்லாம் மக்களை பாதுகாக்க முடியுமோ அந்த வகையில் எல்லாம் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசம், மாநில அரசம் எடுத்து வருகிறது. 

இந்த சூழ்நிலையிலும் மிக மகத்தான பணியான மருத்துவ பணியாளர்களும், காவல்துறையினரும், தூய்மைபணியாளர்களும், ஊள்ளாட்சி அமைப்பினர், ஊடகத்துறையினர் ஆகியோர்கள், அவர்களது பணியினை நேர்த்தியோடு செய்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இன்று சமுதாயத்தில் பாதிக்கப்பட்டிருக்கிற அனைத்து பிரிவினருக்கும், சுய ஊரடங்கு நேரத்தில், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாத வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2கோடியே 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்கமாக ரூ.1000/-மும், ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் எல்லாம் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சமுதாயத்தில் குடும்ப அட்டை இல்லாமல் வாழ்கின்ற 4,022 திருநங்கைகள் கண்டறிப்பட்டு அவர்களுக்கு விலையில்லாமல் உணவு பொருட்கள் மற்றும் உதவித்தொகையும் வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவைச் சார்ந்த நரிக்குறவர்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை இன்று செய்து கொடுத்திருக்கிறோம். சுய ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு அவசர நிலை கருதி செல்ல வேண்டும் என்றால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் உரிய அனுமதி பெற்றே செல்ல முடியும். 

நமது மாவட்டத்தில் இதற்காக முத்து மாவட்டம் என்ற செயலி துவங்கப்பட்டுள்ளது. செயலியில் விண்ணப்பித்து அனுமதி பெற்றால் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தி அரிசி ஆலைகள், பருப்பு ஆலைகள், ஆயில் மில் போன்ற தொழிற்சாலைகளில் வேலைபார்க்கின்ற பணியாளர்கள், ஒட்டுநர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கரோனா ஒழிப்பிற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்கள் கூட்டத்தை தவிர்க்கவே டாஸ்மாக் கடையை அரசு மூடி  உள்ளது, ஜாதி ,மதம், இனம் பார்த்து நோய்கள் வருவதில்லை. மனித இனமே பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் இதில் அரசியலையோ. மதத்தையும், சாதியையோ பற்றி பேசினால் அது நன்றாக இருக்காது,

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இதில் 10 பேர் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள். ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர். பரிசோதனை ஆய்வின் முடிவில் தான் கண்டறியப்படுகின்றன, கொரோனா தொற்று உள்ளவர் எந்த பிரிவை சேர்ந்தவர், எந்த மதத்தை சேர்ந்தவர்  என்று அரசு பார்ப்பதில்லை, மனிதாபிமானத்துடன் செயல்பட்டு யாராக இருந்தாலும் நோய் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். 

தலைப்புச்செய்திகள்