Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒற்றுமை தீபம்: திருச்சியில் பிரதமர் உருவத்துடன் ரங்கோலி கோலம்

ஏப்ரல் 07, 2020 09:16

திருச்சி: திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கொரோனா ஒழியட்டும் கொரோனா ஓடட்டும் கொரோனா வைரஸ் என்ற வாசகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கோலங்களாக எழுதப்பட்டு விளக்கேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுமட்டுமல்லாது பிரதமரின் உருவப்படத்தை ரங்கோலி கோலமாக வரைந்தும் கொரோனா வைரஸ் குறித்த படத்தையும் ரங்கோலி கோலமாக வரைந்தும் விளக்கேற்றப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டுமல்லாது திங்கள்கிழமை காலையும் பெரும்பாலான வீடுகளில் வாசல்களில் இத்தகைய கோலங்கள் வரையப்பட்டிருந்தன.

திருச்சி மேலஅடையவளஞ்சான் பகுதியைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர்களும் மகளிர் சங்கங்களில் ஈடுபாடுமிக்கவும் கலைகளில் ஆர்வம் கொண்டவருமான மங்களம் (53) பிரதமரின் உருவப்படத்தை தனது இல்லத்தில் ரங்கோலி கோலமாக வரைந்திருந்தார்.

தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இணைந்து இரண்டரை மணிநேரம் எடுத்துக் கொண்டு இந்தப் படத்தை வரைந்திருந்தார். பிரதமர் நரேந்திரமோடி விளக்கேற்றுவதைப் போன்று வரைந்த இந்த கோலத்தில் அகல் விளக்குகளை ஏற்றியும் பிரதமரின் வேண்டுகோளை நிறைவேற்றினர். 

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில்; கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தோம். இதன் தொடர்ச்சியாக பிரதமரின் வேண்டுகோளை ஏற்று அகல்விளக்கு ஏற்றும் முயற்சிக்கு குடும்பத்தினருடன் ஆலோசனை செய்ததில் ரங்கோலி வரையும் திட்டம் உருவானது. பிரதமரே விளக்கேற்றும் வகையில் இந்த ரங்கோலி கோலத்தை வரைந்தோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.

இதேபோல திருச்சி நாணயவியல் கழகச் செயலரான பத்ரிநாராயணனும் திருச்சி சின்னசெட்டி தெருவில் உள்ள தனது வீட்டில் கொரோனா வைரஸ் ஒழியட்டும் என்ற ஆங்கில வாசகங்களுடன் கோலம் வரைந்து 200- க்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை வட்ட வடிவில் ஏற்றியிருந்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில் உலகம் கண்டிராத இயற்கை பேரிடரான வைரஸ் தொற்றை எதிர்த்து ஏக மனதாக நாடெங்கும் மக்கள் ஒன்றுகூடி மின் விளக்குகளை அணைத்து விளக்கேற்றி ஒற்றுமையை எடுத்துக்காட்டியுள்ளோம் என்றார்.

தலைப்புச்செய்திகள்