Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து: திருமாவளவன் எதிர்ப்பு

ஏப்ரல் 07, 2020 03:35

சென்னை: “நாடாளுமன்ற உறுப்பினர் ஊதியம் 30% பிடித்தம், இரண்டாண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து என மத்திய அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யவேண்டும்,” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெரும் நிதி தேவைப்படும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முடிவுகளை எடுத்துவருகின்றன. முதலமைச்சர் நிவாரண நிதி, பிஎம் மோடி கேர்ஸ் என பல வழிகளில் மக்கள் நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து, ஊதியத்தில் 30 % பிடித்தம் என மத்திய அரசு பல புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளதற்கு தொல்.திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தைப் பிடித்தம் செய்யப்போவதாக தன்னிச்சையாக முடிவெடுத்து மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியிருப்பது, இந்த நாடு 'பொருளாதார அவசரநிலையை' நோக்கிப் போகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஜனநாயக நடைமுறைகளுக்கு முரணான இந்த அவசர சட்டத்தை உடனடியாக ரத்துசெய்யவேண்டும் .

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது ஒருமாத ஊதியத்தை முதல்வர் நிவாரணநிதிக்கு வழங்கியுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கூடுதலாக ஒரு மாத ஊதியத்தை புதுச்சேரி மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் அளித்துள்ளோம்.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்து அந்தத் தொகையை ஒருங்கிணைந்த நிதியில் சேர்த்திருப்பதும் ஜனநாயக அணுகுமுறை இல்லை. தொகுதி மேம்பாட்டு நிதி என்பது அந்தந்தத் தொகுதியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்வதற்கானது. இந்த இரண்டு ஆண்டுகளுக்கும் கொரோனா சம்பந்தமான பணிகளுக்கு மட்டுமே அந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டிருந்தால்கூட அதனை ஒப்புக் கொள்ளலாம். மாறாக, அந்த நிதியை ஒட்டுமொத்தமாக ரத்து செய்திருப்பது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுச் செயற்பாடுகளை முடக்குவதாகும்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியைத் தனது தொகுதியின் நலன்களுக்காக செலவிடுவதே சரியானதாக இருக்கும். மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியில் அதைச் சேர்த்தால் அந்த தொகையைக்கொண்டு எந்த மாநிலத்துக்கு மத்திய அரசு செலவிடப் போகிறது என்பது யாருக்கும் தெரியாது. எனவே, இது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல; தொகுதி மக்களை வஞ்சிப்பதுமாகும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்