Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

‘அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமில்லை’: ஸ்டாலின் கண்டனம்

ஏப்ரல் 07, 2020 03:38

சென்னை: வெண்டிலேட்டர் வாங்கி கொள்வதற்காக அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி ஒரு கோடியே, 3 லட்சம் கொரோனா நிதியாக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கினார். ஆனால், இந்த நிதியை வாங்க ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துவிட்டது. “முதலில் நிதியை ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பிறகு மறுத்திருப்பது சரியல்ல என்றும், அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரம் இல்லை,” என்றும் தி.மு.க. தலைவர் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கம் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு முழு வீச்சில் இதில் இறங்கி தடுப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் இறங்கி உள்ளது. கொரோனா பாதிப்புக்காக தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதுபோல, தொழிலதிபர்களும் இந்த மனிதநேய முயற்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். 

அதன்படி, தி.மு.க.வை சார்ந்த எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலரும் தொகுதி நிதியில் இருந்து உதவி வருகிறார்கள். அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்டபட்ட பொதுமக்களுக்கு அரசு எடுக்கும் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு உதவியாக, அரசு மருத்துவமனைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் மருத்துவ கருவிகள் வாங்க நிதியுதவி தந்து வருகின்றனர்.

அந்த அடிப்படையில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி ஒரு கோடியே 3 லட்சம் ரூபாயை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கினார். முதலில் இந்த நிதியை ஏற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகம், பிறகு மறுத்துவிட்டது. இதற்கான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், தி.மு.க. வட்டாரத்தில் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று, கவனிக்கவும் என்று தமிழக அரசுக்கு ஸ்டாலின் தெரியப்படுத்தி உள்ளார்.

"இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் அரசியல் செய்வது ஆளுங்கட்சிக்கு அழகல்ல, மதிப்புக்குரிய தமிழக முதல்வர் அவர்கள் இந்த இக்கட்டான நிலையில் அரசியல் செய்யாமல் மக்கள் நலனில் ஈடுபட வேண்டும். நிதியை உடனே ஏற்றுக்கொள்ள வேண்டும். போக்குவரத்துத்துறை அமைச்சர் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை மறக்க வேண்டும்" என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்