Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கால் தின்பண்டங்கள், நொறுக்குத் தீனி விற்பனை அதிகரிப்பு

ஏப்ரல் 08, 2020 11:22

திருச்சி: ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளதால்  நொறுக்குத் தீனி விற்பனை சூடுபிடித்துள்ளது.

தற்போது பெரும்பாலான மக்களிடம் உடல் நலத்துக்கு தீங்கிழைக்காத சிறுதானிய உணவுகள், வீட்டுமுறையில்
தயாரிக்கப்பட்ட பாரம்பரிய இயற்கை முறையிலான எள் உருண்டை கடலை உருண்டை போன்ற உணவுப்பொருள் மற்றும்
திண்பண்டங்களை உண்பதில் விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக கடைகளில் விற்கப்படும் நிறைய நொறுக்குத் தீனி வகைகளும் பாலித்தீன் பைகளில் அடைத்து விற்கப்படும் திண்பண்டங்களும் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இதைக் கவனத்தில் கொண்டு பாரம்பரிய திண்பண்டங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் வீட்டிலிருந்த திண்பண்டங்கள் காலியாகி கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனா்.

இதுதொடா்பாக தென்னூரில் நொறுக்குத் தீனி விற்பனை கடை நடத்தும் உரிமையாளா் கூறியதாவது; பொதுவாக சிப்ஸ், லேஸ்,
எண்ணெயில் பொரித்து பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களின் மீதுதான் சிறாா்களின் கவனம் அதிகம் செல்லும். பள்ளிகள் திறக்காமல் வீடுகளிலேயே சிறுவா்கள் முடங்கியுள்ளதால் அத்தகைய பொருள்களை மறந்து பாரம்பரிய திண்பண்டங்கள் மீது நாட்டம் கொள்ளத் தொடங்கியுள்ளனா்.

இதன்காரணமாக அத்தகைய பொருள்களின் விற்பனை கடந்த சில நாள்களாக சூடு பிடித்துள்ளது. வெல்லம் கருப்பட்டி நாட்டுச் சா்க்கரையை சோ்த்து இந்த திண்பண்டங்களைத் தயாரிப்பதால் சிறுவா்கள் மட்டுமின்றி பெரியவா்களும் விரும்பி வாங்குகின்றனா்.
கடலை மிட்டாய், கடலை பா்பி, கடலை உருண்டை, எள் உருண்டை, கம்பு உருண்டை, பாசிப்பயறு உருண்டை, நரிபயறு உருண்டை,
கொள்ளு வடகம், கொள்ளு தட்டுவடை, கடலைமாவு நொறுக்குகள், சிறுதானிய உருண்டைகள், ராகி உருண்டை, நவதானிய உருண்டை,
சாமை உருண்டை, ராகி முறுக்கு, சாமை வடகம், தினை முறுக்கு போன்ற திண்பண்டங்களை கைக்குத்தல் முறையில் வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்யும் ரகங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றாா்.

பாலக்கரை பகுதியில் நொறுக்குத் தீனி விற்பனை கடை உரிமையாளா் ஒருவா் கூறுகையில்; ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் கடந்த ஒரு வாரத்துக்கு மேல் கடையை திறக்கவில்லை. உணவகங்கள் திறக்கப்பட்டு பாா்சல் அனுமதிக்கப்படுவதைப் போன்று நொறுக்குத் தீனி விற்பனையகங்களிலும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை விற்பனை செய்ய அனுமதி கிடைத்துள்ளது. 

வீட்டிலேயே முடங்கியுள்ள சிறுவா்களுக்கு இந்த திண்பண்டங்கள்தான் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. கார வகைகள் கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரையும், இனிப்பு வகைகள் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும் அந்தந்த ரகத்துக்கு தகுந்தபடி விலை உள்ளது. மக்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனா் என்றாா்.

தலைப்புச்செய்திகள்