Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சைதாப்பேட்டையில் வலம் வந்த ஸ்டாலின்: மாஸ்க் இல்லாமல் வந்தவர்களுக்கு ‘அட்வைஸ்’

ஏப்ரல் 08, 2020 01:36

சென்னை: “கடை எப்போ திறக்குறீங்க?, பால் கிடைக்குதா?, ஏன் மாஸ்க் போடாம வெளியே வர்றீங்க?” என்று சென்னை சைதாப்பேட்டையில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் நேற்று மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்டு மக்களுக்கு கொரோனா குறித்து அறிவுரை வழங்கினார்.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசு முழு வீச்சில் இறங்கி உள்ளது. அதுபோலவே அரசுக்கு ஒத்துழைப்பு தருவதற்காகவும், மக்களின் நலன் காக்கவும் தி.மு.க.வும் களமிறங்கி இருக்கிறது. கொரோனா தொற்று பாதிப்பு குறித்து கோரிக்கைகளையும், அது சம்பந்தமான தி.மு.க. எடுத்து வரும் நடவடிக்கைகளையும் அடிக்கடி அக்கட்சி தலைவர் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் விடாமல் பதிவிட்டு வருகின்றார்.

இதனிடையே தொகுதிகளுக்கு விசிட் அடித்து அங்குள்ள கொரோனா ஆய்வுப் பணிகளையும் நேரடியாகவே பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று சைதாப்பேட்டைக்கு ஸ்டாலின் சென்றார். சைதை தொகுதி எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியுடன் இணைந்து வி.வி.கோயில் தெரு, வி.எஸ்.முதலி தெரு ,சுப்ரமணிய கோயில் தெரு , பஜார் ரோடு ஆகிய பகுதிகளில் 'கொரோனா ஊரடங்கு' குறித்து ஆய்வு நடத்தினார்.

இந்த தெருக்களில் நுழைந்த ஸ்டாலின் அங்கிருந்த கடைகளுக்கு சென்று, கடைகளை எத்தனை மணிக்கு திறக்கிறீர்கள்? எத்தனை மணிக்கு மூடுகிறீர்கள்?, பால், மளிகை பொருள் எல்லாம் தடையில்லாமல் கிடைக்கிறதா? அரசு சொன்ன நேரத்தில்தானே கடையை திறந்திருக்கீங்க? என்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார். பிறகு மளிகை பொருட்கள் விலை குறித்தும் விசாரித்தார்.

இதையடுத்து, மளிகை கடைக்கு வந்த பொதுமக்களிடம், பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியே வரும்போதும், போகும்போதும் 'தனிமனித இடைவெளியை' கடைபிடிக்க வேண்டும் என்றார். பின்னர் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள 500 மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்குத் தேவையான உணவு பொருட்களை 'டிசம்பர் 3 இயக்கத்தின்' மூலம் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளில் வழங்கிட, அதன் மாநில தலைவர் பேரா.தீபக்கிடம் ஸ்டாலின் ஒப்படைத்தார்.

ரோட்டில் சென்று கொண்டிருந்த மக்களுக்கு மாஸ்க்குகள், சானிடைசர்கள், சோப்புகளை வழங்கினார். ஒருசிலர் மாஸ்க் இல்லாமல் டூவீலரில் சென்றனர். அவர்களிடம் மாஸ்க் தந்து, "இதை போடுங்க.. இனிமேல் மாஸ்க் இல்லாமல் வெளியே வரக்கூடாது" என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

தலைப்புச்செய்திகள்