Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து சென்னையிலிருந்த 3 வங்கதேசத்தினர் கைது

ஏப்ரல் 09, 2020 03:52

சென்னை: டெல்லி மாநாட்டில் பங்கேற்று வந்ததை மறைத்தாக வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே உள்ளது. டெல்லியில் நடந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1,131 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதில் 500க்கும் மேற்பட்டவர்களை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர். ஆனால் சிலரை மட்டும் கண்டறிய முடியவில்லை. மேலும் அவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் அவர்கள் தாமாக சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

அதன்பிறகு அடுத்த நாளே பலரும் முன்வந்து தாங்களாக சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்து பரிசோதனைக்கு வந்தனர். ஆனால் அதிலும் ஒரு சிலர் மட்டும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்துவிட்டு சுற்றியுள்ளனர். அப்படி சுற்றிவிட்டு மலேசியாவுக்கு தப்ப முயன்ற 10 பேர் அண்மையில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பூந்தமல்லி கொரோனா தடுப்பு முகாமில் அனுமதிக்ப்பட்டனர்.

இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்று சென்னை திரும்பிய வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் , சிகிச்சைக்கு முன்வாராமல் சென்னை பெரியமேடு பகுதியில் தங்கி இருந்தது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பெரிய மேடு போலீசார் வங்கதேசத்தினர் தங்கியிருந்த பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது வங்கதேசத்தினர் 3 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் ஐ.பி.சி. 188, 269, 270 ஆகிய மூன்று பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைதான 3 நபர்களும் சுகாதாரத்துறை அதிகாரிகளி ஆலோசனைப்படி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்