Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கங்கை நதிக்கரையில் இருந்து காசி விசுவநாதர் கோவிலுக்கு நேரடி சாலை: பிரதமர்

மார்ச் 09, 2019 09:08

வாரணாசி: ரூ.600 கோடியில் கங்கை நதிக்கரையில் இருந்து காசி விசுவநாதர் கோவிலுக்கு நேரடி சாலை அமைக்கும் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதி, உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி. நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில், அங்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று பயணம் மேற்கொண்டார். 
 
முதலில் அவர் காசி விசுவநாதர் ஆலயத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது மாநில கவர்னர் ராம் நாயக்கும், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் உடன் இருந்தனர். 

அதைத் தொடர்ந்து அவர் காரில் இருந்தவாறு நகரை வலம் வந்தார். அப்போது சாலையின் இரு ஓரத்திலும் நின்று கொண்டிருந்த மக்களுக்கு உற்சாகமாக கையசைத்தார். 

வாரணாசியில் கங்கை நதிக்கரையில் இருந்து காசி விசுவநாதர் ஆலயத்துக்கு நேரடியாக எளிதாக செல்கிற வகையில் 50 அடி அகலத்தில் ரூ.600 கோடி செலவில் பிரமாண்ட சாலை அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் ஆகும். 

இந்த திட்டத்துக்கு அவர் நேற்று அடிக்கல் நாட்டிப்பேசினார். அப்போது அவர் கூறியதாவது. இந்த வேலையை செய்து முடிப்பதற்காகத்தான் கங்கைத்தாய் என்னை 2014-ம் ஆண்டு இங்கு அழைத்து வந்தார் என்று கருதுகிறேன். அப்போது இருந்த மாநில அரசின் (அகிலேஷ் யாதவ் அரசு) ஒத்துழையாத போக்கால் என் ஆட்சியின் முதல் 3 ஆண்டு காலத்தில் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது. 

இந்த திட்டப்பணிகள் 2014-ம் ஆண்டு தொடங்கி இருந்தால், இப்போது சாலையை நாம் திறந்து வைத்திருக்கலாம். இந்த சாலையை அமைப்பதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்ற வாக்குறுதியை உங்களுக்கு தருகிறேன். இந்த சாலை, நமது பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும், மத புனிதத்தையும் காக்கும். 

இந்த சாலையில் உள்ள 40 கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு, பழைய நிலைக்கு கொண்டு வரப்படும். ஆக்கிரமிப்புகளில் இருந்து இந்த சாலை விடுவிக்கப்பட்டு அழகுபடுத்தப்படும். கோவில் வளாகம் முழுவதும் புத்துயிரூட்டப்படும். 

இந்த சாலை அமைக்கும் திட்டமானது, இனி வரவுள்ள திட்டங்களுக்கு முன்மாதிரியாக அமையும். காசிக்கு உலகளாவிய புதிய அடையாளமாக இந்த சாலை திகழும். 

இந்த திட்டத்துக்காக தங்கள் நிலங்களை கையகப் படுத்த தந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். காசி விசுவநாதருக்கு அவர்கள் அளித்த மிகப்பெரிய தானம் இது. இவ்வாறு அவர் கூறினார். 

கான்பூரில் நடந்த வளர்ச்சித்திட்டப்பணி விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் லக்னோவில் அப்பாவி காஷ்மீர் மக்களை தாக்கியவர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்ததை குறிப்பிட்டார். 

இதே போன்று பிற மாநிலங்களிலும் அப்பாவி காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறவர்கள் மீது அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தலைப்புச்செய்திகள்