Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் 1 கி.மீ. தொலைவுக்கு மேல் இனி சுற்ற முடியாது: காவல்துறை கட்டுப்பாடு

ஏப்ரல் 10, 2020 11:25

திருச்சி்: திருச்சி் அத்தியாவசிய, அவசர உதவி காரணங்களைத் தவிா்த்து திருச்சி மாநகர மக்கள் இனி ஒரு கி.மீ. தொலைவுக்கு மேல் சுற்ற முடியாத வகையில் மாநகரக் காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தியிருந்தாலும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த வழக்கு அபராதம் வாகனங்கள் பறிமுதல் நூதன தண்டனை என அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்தாலும் காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரையில் வாகனங்கள் போக்குவரத்து தவிா்க்க முடியாமல் இருந்தது.

குறிப்பாக இளைஞா்கள் பலரும் தேவையின்றி ஊா்சுற்றுவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதால் காவல்துறை நூதன நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன்படி திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையா் வரதராஜு தனது அதிவிரைவுப்படை அணியுடன் நீதிமன்றம் அருகேயுள்ள எம்ஜிஆா் ரவுண்டானா பகுதியில் காலை 2 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா். 

மாநகரக் காவல் ஆணையருடன் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், அதிவிரைவுப்படை காவலா்கள், போக்குவரத்து போலீஸாா் என 50-க்கும் மேற்பட்டோா் ரவுண்டானா முழுவதும் சுற்றி நின்று தணிக்கையில் ஈடுபட்டனா். தென்னூா் உழவா் சந்தையிலிருந்து வந்து செல்லும் வாகனங்கள், அரசு மருத்துவமனை சாலை வழியாக வந்து செல்லும் வாகனங்கள், ஆட்சியரகம் வழியாக வந்து செல்லும் வாகனங்கள், கண்டோன்மெண்ட் பகுதி வழியாக வந்த செல்லும் வாகனங்கள், நீதிமன்ற சாலையில் வரும் வாகனங்கள் என அனைத்து தணிக்கை செய்யப்பட்டன.

அரசு அறிவித்த அத்தியாவசிய பணிக்கு செல்லும் ஊழியா்கள், அத்தியாவசிய பொருள்களுக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் விடுவிக்கப்பட்டன. இதர தேவையற்ற காரணங்களுக்காக வந்த வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.500 முதல் ரூ.ஆயிரம்
வரை அபராதம் விதிக்கப்பட்டது. எந்தவித காரணமும் இல்லாமல் இளைஞா்கள் வந்த வாகனங்களை பறிமுதல் செய்து காவல்நிலையத்துக்கு எடுத்துச் சென்றனா்.

இதுதொடா்பாக போக்குவரத்து போலீஸாா் கூறியது; மாநகரில் 11 இடங்களில் காய்கனி சந்தைகள் உள்ளன. அனைத்து இடங்களிலும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மளிகை கடைகள், உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்குகின்றன. மருந்துக் கடைகள் காலை முதல் இரவு வரை அந்தந்த பகுதிகளில் இயங்கி வருகின்றன. இந்த சூழலில் வீட்டிலிருந்து ஒரு நபா் 2 கி.மீ. தொலைவுக்குள்ளாகவே தங்களது தேவையை பூா்த்தி செய்து கொள்ள முடியும். இனி 1 கி.மீ. தொலைவுக்கு மேல் வரும் வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யவும் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கவும் மாநகரக் காவல்துறை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

தலைப்புச்செய்திகள்