Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

‘கடைசியாக முகத்தைக் கூட குடும்பத்தினரால் பார்க்க முடியாது’: கொரோனாவால் இறந்தவர் உடல் அடக்கம் செய்வது எப்படி?

ஏப்ரல் 10, 2020 01:41

சென்னை: கொரோனா பாதிப்பில் உயிரிழப்பவரின் முகத்தைக்கூட குடும்பத்தினரால் கடைசியாக ஒருமுறை பார்க்க கூட முடியாத கொடூரமான சூழல் நிலவுகிறது. கொரோனாவால் இறந்தவர் உடல் தமிழகத்தில் எப்படி அடக்கம் செய்யப்படுகிறது என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

கொரோனா என்ற கொடிய வைரஸ்க்கு அது எதுவும் தெரியாது. உங்களை சுற்றி உள்ளவர்கள் அவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியாமலேயே உங்களுக்கு பரப்பி விடுவார். அறிகுறிகள் தெரிய சிலருக்கு 14 நாட்கள் வரை கூட ஆகிறது. எனவே, அவர்கள் பலருடன் பேசுவது, பழகுவதால் கொரோனா எத்தனை பேருக்கு பரவியிருக்கும் என்பது தெரியாது.

அதன்பிறகு சங்கிலி தொடர் போல் பரவி விடும். இதனால் குறைந்த நாட்களிலேயே பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவிடும். இதில், எத்தனை பேர் உயிர் பிழைப்பார்கள் என்பது மருத்துவர்களுக்கே தெரியாது. ஏனெனில் மருந்துகள் இல்லை. தடுப்பூசியும் இல்லை. சொல்லப்போனால் அவர்களின் உயிருக்கு கூட உத்தரவாதம் இல்லை. மரணத்துடன் போராடித்தான் சிகிச்சை அளிக்கிறார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் அவரது குடும்பத்தினருக்கு கொரோனாவை பரப்பி விடுவதுடன், அவர் இறந்துவிட்டால் அவரது உடலை கூட குடும்பத்தால் கடைசியாக ஒருமுறை பார்க்க முடியாது என்ற நிலையே நிலவுகிறது. அப்படி ஒரு சோக சம்பவம் தான் தமிழகத்தில் வேலூரில் நடந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை முன்னெச்சரிக்கையாக ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்தார்கள். அவரது உடல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சாதாரண துணியைக் கொண்டு 3 அடுக்குகள் உடலில் சுற்றப்பட்டது. அடுத்து பிளாஸ்டிக் பையில் வைத்து மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து பிரத்யேக வாகனத்தில் உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் ஐந்து பேர் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதை செய்யும் இவர்கள் 5 பேரும் முழுஉடல் பாதுகாப்பு உடை, கவசங்களை அணிந்து கொண்டிருந்தார்கள்.
உறவினர்கள் யாருமே அருகில் அனுமதிக்கப்படவில்லை. உடல் அடக்கம் செய்வதற்காக இடுகாட்டில் 12 அடி ஆழம் தோண்டப்பட்ட குழியில் அதிக அளவு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதில் உடல் இறக்கப்பட்டு மண் போட்டு மூடப்பட்டது. மண் மூடிய பிறகும் அந்த இடம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மதச்சடங்குகளும் 20 அடி தள்ளி நின்றபடியே நடத்தப்பட்டது. இறுதியாக அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பு உடைமைகள் அங்கேயே அருகில் தீயிட்டு கொளுத்தப்பட்டது. தூய்மை பணியாளர்களின் உடல் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டனர். அங்கு வந்த அனைவரின் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

கடைசியாக ஒருமுறை இறந்தவரின் முகத்தை கூட யாரும் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டதுதான் உச்சக்கட்ட கொடுமை. எந்த குடும்பத்தினராலும் இப்படி ஒரு சூழலை ஜீரணிப்பதும் கடினம் என்றாலும், நிர்ப்பந்தமும் நிலைமையும், யதார்த்தமும் இதுதான். தொற்று ஏற்பட்டு யார் இறந்தாலும் அவர்களும் இப்படித்தான் அடக்கம் செய்யப்படுவார்கள்.
முடிந்தவரை இந்த வைரஸ் அரக்கனை அண்டவிடாமல் இருப்பதுதான் நமக்கு இப்போது இருக்கும் ஒரே வழி. அதைதான் இந்த வேலூர் மரணத்தின் அடக்கமும் நமக்கு உணர்த்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்