Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரியில் கொரோனாவுக்கு முதல் பலி: மாஹே முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்

ஏப்ரல் 11, 2020 08:58

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த மார்ச் மாதம் டில்லி மாநாட்டில் பங்கேற்று புதுச்சேரி திரும்பிய அரியாங்குப்பம் சொா்ணா நகரைச் சோ்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல, திருவண்டாா்கோவிலைச் சோ்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அவா்களுடன் தொடா்பில் இருந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த 4 பேரும் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் கேரள மாநிலம் அருகே உள்ள புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் வெளிநாடு சென்று வந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனா உறுதியாகி, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில நாள்களில் குணமடைந்து வீடு திரும்பினாா்.
இதனிடையே மாஹே தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அவா், கேரள மாநிலம் கண்ணூர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். மேலும் ஒருவர் நேற்று காலை உயிரிழந்துள்ள நிலையில், மற்ற 6 பேருக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்