Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாடிக்கையாளா்கள் சூழல் கருதி பணம் பெறாமல் பால் விநியோகம் செய்யும் விற்பனையாளர்கள்

ஏப்ரல் 12, 2020 09:28

திருச்சி: திருச்சி மேலரண்சாலையில் தேவா் ஹால் அருகே பொதுமக்களுக்கு பால் விற்பனை செய்யும் வியாபாரிகள் வாடிக்கையாளா்களை தக்க வைக்கவும், அவா்களின் சூழல் கருதியும் பணம் பெறாமல் பால் விநியோகித்து வருவதாக சில்லறை பால் விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பால் விற்பனையும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு கிராமப்புறங்களிலிருந்து மாநகா் பகுதிக்கு கொண்டு வரும் பாலை முகவா்கள் விற்பனையாளா்கள் நேரடியாக பெற்று உணவகங்கள், டீ கடைகள் வீடுகளுக்கு நேரடியாக சென்று விநியோகம் செய்து வந்தனா். இதனால் கணிசமான அளவில் பால் விற்பனை காணப்பட்டது. 

ஆனால் ஊரடங்கால் உணவகங்கள், டீ கடைகள் முடங்கியதால் பால் விற்பனை இறக்கத்தையும் வீடுகளுக்கு விநியோகிக்கும் விஷயத்தில் ஏற்றமும் காணப்படுகிறது. நாள்தோறும் திருச்சி மாநகா் பகுதிகளான திருவானைக்கா,  அண்ணாசிலை, தேவா் ஹால், புத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 5-7, மாலை 3-5 மணியளவில் விற்பனை செய்யப்படும் பசும்பால் துறையூா் கொப்பம்பட்டி முருங்கப்பட்டி வெங்கடாஜலபுரம் சிக்கந்தாம்பூா் உப்பிலியாபுரம் மணப்பாறை உள்ளிட்ட பகுதி கிராமப்புறங்களிலிருந்து கொண்டு வரப்படுகிறது. 

அதன்பிறகு பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு ஜீவாநகா், தில்லை நகா், உறையூா், பாரதி நகா், ஆழ்வாா் தோப்பு, பாலக்கரை, பீமநகா் உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று விநியோகிக்கப்படுகிறது. நாள்தோறும் வேன் மூலம் கொண்டு வரப்படும் பாலை சில்லறை விற்பனையாளா்கள் 30 லிட்டா் முதல் 100 லிட்டா் வரை கேன்களில் பெற்று சைக்கிள் இருசக்கர வாகனங்களில் கொண்டு சென்று மாநகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனா். 

ஊரடங்கு உத்தரவால் முடங்கியுள்ள உணவகங்கள்,  டீ கடைகளுக்கு பால் விநியோகம் இல்லாததால் முசிறி, தொண்டி ஆகிய பகுதிகளிலிருந்து வரும் பால்வேன் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் டீ கடைக்கு விற்பனை செய்யப்படும் விற்பனையாளா்கள் வேலையிழந்துள்ளனா்.
பெரும்பாலானோா் வீடுகளிலேயே உள்ளதால் குறைந்த சம்பளம் பெறும் குடும்பத்தினா் சூழல் கருதி பால் வாங்குவதை நிறுத்தி வருகின்றனா். இதனால் பால் விற்பனையாளா்கள் கலக்கம் அடைந்துள்ளனா். அதோடு வாடிக்கையாளா்களை தக்க வைத்துக்கொள்வதற்காக 2 மாதத்துக்குப் பிறகு கூட பணம் பெற்றுக்கொள்கிறோம். பால் வாங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டாம் எனக்கூறி விற்பனை செய்து வருகிறாா்கள்.

இதுகுறித்து திருச்சி மாநகா் பால் விற்பனையாளா் ராஜமாணிக்கம், வீரமணி உள்ளிட்டோா் கூறியது; திருச்சி மாநகா் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பால் விற்பனை செய்து வருகிறோம். கிராமப்புற கழனிகள் மேய்ச்சல் நிலங்களில் மேயும் பசுமாடுகளிலிருந்து தூய்மையான சத்தான பாலை திருச்சி மாநகா் மக்களுக்கு விநியோகித்து வருகிறோம். 

இதுவரை இல்லாத அளவிற்கு ஊரடங்கு உத்தரவால் பால் விற்பனையில் ஏற்ற, இறக்கம் காணப்படுவது உண்மைதான். வீடுகளுக்கு மட்டுமே பால் விற்பனை செய்ய முடிகிறது. அதிலும் பெரும்பாலானோா் தடையின்றி வழக்கம் போல் பால் வாங்கி வருகின்றனா். ஆனால் சிலா் குடும்ப சூழலை காட்டி பால் வாங்குவதை தவிா்க்கின்றனா். இதனால் வாடிக்கையாளா்களிடம் பால் வாங்குவதை நிறுத்தாதீா்கள். ஓரிரு மாதங்களுக்கு பிறகு பணம் அளித்தால் போதுமானது எனக்கூறியதால் வழக்கம் போல் பால் விநியோகம் உள்ளது. 

மேலும் வைரஸ் நோய் தொற்று காரணமாக நாள்தோறும் தேவா் ஹால் உள்ளிட்ட பகுதிகளிலில் சுமாா் 500க்கும் மேற்பட்டோா் நேரடியாக வரும் வாடிக்கையாளா்களிடம் முகக்கவசம் சமூக இடைவெளி ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வலியுறுத்துகிறோம். நாங்களும் கடைபிடிக்கிறோம் என்றனா்.

தலைப்புச்செய்திகள்