Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடும் வீழ்ச்சியில் தோல் தொழில்: வேலூரில் 75 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்

ஏப்ரல் 12, 2020 12:18

வேலூர்: கொரோனா பாதிப்பு காரணமாக வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் தோல் தொழில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் 75 ஆயிரம் பேர் வேலையிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வந்த சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்களில் 50 சதவீதத்திற்கு மேல் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. அதாவது தடை காலத்திற்கு பிறகு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டாலும் குறைவான உற்பத்தி காரணமாக வேலை குறைப்பு ஏற்படும். அதனால் சுமார் 75 ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. வேலை இழக்கம் பட்சத்தில் அவர்களுடைய வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். வேலை இழப்பு ஏற்பட்டால் தொழிலாளர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

இதுகுறித்து ஆம்பூரை சேர்ந்த தோல் தொழிலதிபரும் தென்னிந்திய ஷூ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளருமான மதார் கலீலூர் ரஹ்மான் கூறியது; இந்திய தோல் மற்றும் தோல் ஏற்றுமதி மொத்த வர்த்தகத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவிற்கு 2017-2018 ம் ஆண்டு 15.70 சதவீதம் ஏற்றுமதியாகின்றது. அதற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா நோய் தொற்ரு பாதிப்புக்கு முன்னதாக தோல் தொழிலில் மந்த நிலை இருந்தது. அந்த மந்த நிலை சற்று தளர்ந்து முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு என்ற பேரிடர் ஏற்பட்டுள்ளது. தோல் தொழில் முழுமையாக ஸ்தம்பித்து போய்விட்டது.

கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் தோல் பொருட்களின் ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்துவார்களா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. மேலும் ஏற்கனவே பொருட்களை வாங்க செய்துள்ள ஒப்பந்தங்களையும் வெளிநாட்டு தொழிலதிபர்கள் ரத்து செய்துள்ளனர். 2020 ம் ஆண்டு ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு தோல் ஏற்றுமதி வர்த்தகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அது 50 சதவீதமாக வர்த்தகம் குறைய வாய்ப்புள்ளது. தற்போதைய கொரோனா பாதிப்பு காரணமாக ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு நட்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காரணமாக தோல் மற்றும் காலனி தொழிற்சாலைகளும் 50 சதவீதம் அளவுக்கு நிலையாக மூடிவிடக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது. தடை காலத்திற்கு பிறகு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டாலும் ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்கள் இல்லாமல் உற்பத்தி செய்ய முடியாத நிலையே
இருக்கும். வருமானம் இல்லாததால் தடை காலத்திற்கு பிறகு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி மற்றும் கடனை திருப்பி செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். இப்பேரிடர் காரணமாக ஏற்படக் கூடிய பிரச்சனையை கடுமையாக போராடி சமாளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கொரோனா நோய் தொற்று என்ற பேரிடர் காரணமாக தோல் தொழில் சரிவை சந்திக்கும் பட்சத்தில் அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மத்திய மாநில அரசாங்கங்கள் வரியினங்களை செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்க வேண்டும். அதே போல அதனால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் உரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்களின் தரப்பிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
 

தலைப்புச்செய்திகள்