Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக: தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

ஏப்ரல் 13, 2020 06:32

சென்னை: தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக உதவி அளிக்கக்கூடாது என அரசு உத்தரவிடுவது சர்வாதிகாரத்தனம் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில்  வெளியிட்ட பதிவு: “ஜனநாயக நாட்டில் யாரும் எவருக்கும் உதவி செய்யலாம்; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம், "கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!"

தமிழக அரசின் செய்தித் துறை, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கரோனா தொற்று காலத்தில் துன்ப துயரத்தை அனுபவித்து வரும் ஏழை - எளிய மக்களுக்கு, உணவுப் பொருட்கள் வழங்குவது தவறு என்றும், மீறினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு போட்டுள்ளதாக அந்தச் செய்திக்குறிப்பு கூறுகிறது.

இத்தகைய உத்தரவு போட்ட ஈவு இரக்கமற்ற அந்த உள்ளத்தை கேட்கிறேன்; தானும் செய்யமாட்டேன், மற்றவர்களும் செய்யக் கூடாது, செய்ய முன்வந்தால் தடுப்பேன் என்பதுதான், இந்த ஆட்சியின் வஞ்சக எண்ணமா?

தனிமனித இடைவெளி இல்லாமல் கூடுவது தவறாக இருக்கலாம். அப்படி கூட்டம் சேர்வதை காவல் துறையினர் ஒழுங்குபடுத்தலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியே செய்யக்கூடாது, உணவுப் பொருள் தரக்கூடாது என்று எப்படி உத்தரவிட முடியும்?

கருணை உள்ளத்தோடு, கண்ணீர் துடைக்கத் தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க எவராலும் இயலாது; இது ஜனநாயக நாடு; யாரும் எவருக்கும் உதவி செய்யலாம்; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம், 'கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!' என்ற வள்ளலார் வார்த்தைகளால் எச்சரிக்கை செய்கிறேன்”. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்