Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1075 ஆக உயர்வு: 11 பேர் பலி

ஏப்ரல் 13, 2020 07:29

சென்னை: தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் ஒரு பெண் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில், தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில்  கொரோனாவால் மேலும் 106 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்துள்ளது. வீட்டு கண்காணிப்பில் 39,041 பேரும், அரசு கண்காணிப்பில் 162 பேரும் உள்ளனர். இதுவரை வீட்டு கண்காணிப்பு முடித்தவர்கள் 58,159 பேர். இதுவரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்கள் 10,655 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து 50 பேர் குணமடைந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களின் சிகிச்சை செலவினை அரசே செலுத்தும். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் இனி பரிசோதனை நடத்தப்படும்.

தமிழகத்தில் இதுவரை 8 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களை சோதனை செய்வதற்காக தனிப்பிரிவு ஏற்படுத்தப்படுகிறது. உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை யாரும் தொடர்பு கொள்ள முடியாதபடி பாதுகாப்பு ஏற்படுத்தப்படும். பிளாஸ்மா சிகிச்சை முறைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அந்த சிகிச்சை முறையை முழுவதுமாக அறிந்து அதை பயன்படுத்தி சோதனை செய்ய இருக்கிறோம். இது ஒரு சோதனை முயற்சி தான். கொரோனா நோயாளிகளுக்கு மனஅழுத்தம் நீங்க ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. சென்னையில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்