Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வெளியில் நடமாடலாம்: கொரோனாவை தடுக்க தமிழக அரசு அதிரடி திட்டம்

ஏப்ரல் 13, 2020 11:37

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்கவும், ஊரடங்கின் போது வாரந்தோறும் இரண்டு நாட்கள் மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்பது உட்பட 8 நிபந்தனைகளை கிராமபஞ்சாயத்து நிர்வாகங்கள் விதித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளையும் ஆட்டம் காண வைத்துள்ளது.  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

தமிழகத்தில் வைரஸ் தொற்றால் 1,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் இறந்துள்ளனர். 50 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில்  தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் ஊரடங்கு உத்தரவு நீடிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துளன. சில மாநிலங்கள்  ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீடித்துள்ளன.

இந்நிலையில் தமிழக அரசும் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீடித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருமணங்கள், கோவில் திருவிழாக்கள், காய்கறி சந்தைகள், இறைச்சி கடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் பஞ்சாயத்து நிர்வாகங்கள் மக்களுக்கு வெளியில் நடமாட 8 நிபந்தனைகள் விதித்து 2 நாட்களுக்கு மட்டும் அனுமதியளித்துள்ளது.
அதன்விபரம் வருமாறு:
1. அனுமதிச்சீட்டு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செல்லும்.
2. அனுமதி சீட்டு செவ்வாய் மற்றும் வெள்ளி (ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் மாறுபடும்) ஆகிய கிழமைகளுக்கு மட்டும் செல்லும்.
3. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்படும். வெளியில் வரும் நபர் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும்.
4. 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
5. வெளியே வரும் நபர் முகக்கவசம் அணிந்தும், இருசக்கர  வாகனத்தில் வரும் நபர்  முகக்கவசத்துடன் ஹேல்மெட் அணிந்தும் வாகனச் சான்றுகளுடன் மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படும்.
6. சமுக இடைவெளி (1 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை) இடைவெளியை அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் போது நின்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.
7. சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் தேவையில்லாமல் மேற்கண்ட அனுமதி சீட்டை வைத்துக் கொண்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
8. தேவை இருக்கும் காலத்தில் மட்டுமே இந்த அனுமதி சீட்டை பயன்படுத்த வேண்டும். 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் வரை அனுமதி சீட்டு செல்லும். மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கிராம பஞ்சாயத்து நிர்வாகங்கள் சார்பில் குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டு அந்த அனுமதி சீட்டில் எண்ணை குறிப்பிட்டு வீடுதோறும் வழங்கி வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு கடைகள் திறந்திருக்கும் போது வெளியே சென்று வந்த பொதுமக்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வெளியில் செல்ல அனுமதி என்று உத்தரவிட்டுள்ளதால் அதிர்ச்சியில் உள்ளனர்.
மக்களுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டில் சம்மந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் டி.எஸ்.பி. கையொப்பம் இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்