Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது; முதல்வர் உத்தரவு

ஏப்ரல் 13, 2020 11:53

சென்னை: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் (ஏப்.,14) முடிவடையும் நிலையில், தமிழகத்தில் ஏப்.,30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்.,பிறப்பித்த உத்தரவு: ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழகத்தில் நோய்த் தொற்று பெரிய அளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளையும், ஏப்.,11ம் தேதி பிரதமர் காணொலி மூலமாக கலந்தாய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும், தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தேன்.

மேலும், ஏப்.,30 வரை ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்க வேண்டும் என்ற கருத்தையும் தெரிவித்தேன். நானும், மற்ற முதல்வர்களும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். பிரதமர் ஆலோசனை கூட்டத்தின் நடவடிக்கைகள் அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின்படியும், மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின் படியும், மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144ன் படியும், ஏப்.,30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.

* ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால், தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்யாவசிய பொருட்கள் அனைத்தும், நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.
* கட்டடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ரூ.1000 நிவாரண உதவி வழங்கப்படும்.
* பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.
* காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான காலத்தில், பேக்கரி இயங்க தடையில்லை என்பதையும், உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின் படி பார்சல் விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
* சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள், கொரோனா நோய் தொடர்பான தங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ள டெலி மெடிசின் சொசைட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் பதிவு பெற்ற சிறந்த டாக்டர்களை கொண்டு, தொலை மருத்துவ முறை மூலம் தங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


 

தலைப்புச்செய்திகள்