Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தாராவியில் கொரோனாவுக்கு 5 பேர் பலி: பீதியில் லட்சக்கணக்கான தமிழர்கள்

ஏப்ரல் 13, 2020 11:58

ஆசியாவிலேயே பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் இதுவரை 5 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான தமிழர்கள் வாழும் தாராவியில் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மெல்ல மெல்ல ஊடுருவிய வைரஸ் இன்று இந்தியாவில் 9,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மாநிலங்களிலேயே அதிக பாதிப்புடைய மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்புகளும், உயரிழப்புகளும் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக தாராவிதான் மக்களை திணறவைத்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. உயிரிழப்பு 5 ஆனது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதிதான் தாராவி. மிகவும் நெருக்கமான பகுதி. நெரிசலான மும்பையின் மையத்தில் உள்ளது தாராவி. ஆயிரக்கணக்கான தமிழர்கள் இங்கு வசித்து வருகின்றனர். ஸ்லம் பகுதி என்றாலே அது தாராவிதான். இவர்களில் நிறைய பேர் கல்வி அறிவு பெற்றிருந்தாலும், கூலி தொழில்தான் பிரதானம்.

எந்த தொற்று ஏற்பட்டாலும் அது கட்டாயம் தாராவியை தொட்டுவிட்டுத்தான் செல்லும். அதனாலேயே ஏராளமானோர் இங்கு இறந்து போன வரலாறுகளும் உண்டு. அந்த வகையில் இந்த வைரஸும் தாராவியை பாதித்துள்ளது. நெரிசல் மிக்க பகுதி என்பதால் சமூக விலகல் கேள்விக்குறிதான். கொரோனா பரவ தொடங்கியது என்றதுமே அரசு முதலில் கவனம் செலுத்தியது தாராவியில்தான். அதனால்தான் பலி எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.

55 வயதான நபர் ஒருவர்தான் முதல் பலி. ஆனால், இவருக்கு தொற்று எங்கு?, எப்படி?, எதன்மூலம் பரவியது? என்பது தெரியவில்லை. 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிர்பலியை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிரமான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. எனினும் பொதுமக்கள் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதாக தெரிகிறது. போதுமான பயம் இன்னும் வரவில்லை என்கின்றனர், நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிது. இது சமூக ஆர்வலர்களை கவலை கொள்ளச்செய்துள்ளது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக தாராவி பற்றின கவலை என்னவென்றால், இங்கு பொதுக்கழிப்பறையை நிறைய பேர் பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். கிட்டத்தட்ட 600 பேருக்கு ஒரே பாத்ரூம்தானாம்.. இந்த பொதுக்கழிப்பறை மூலமாகவும் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. பாத்ரூமில் பக்கெட்கள், கைப்பிடிகள், கதவுகளில் வைரஸ் தொற்று இருக்கும். அதனால் கைகளை சுத்தமாக கழுவ அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதியில் வீடு, வீடாக சென்று சோானைகள் மேற்கொள்ளப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இப்போதைக்கு மருந்துகடை தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. எப்படியாவது அங்குள்ள தமிழர்கள் அனைவருமே நலன் பெற வேண்டும். அதற்கான சுகாதார, மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எனினும், நெருக்கமான வீடுகள், குறைவான சுகாதாரம், ஏராளமான பாதிப்புகளில் தாராவி சிக்கி திணறி வருகிறது.


 

தலைப்புச்செய்திகள்