Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முயல் வேட்டையாடிய 2 பேர் மின்வேலியில் சிக்கி பலி: சடலங்களை யாருக்கும் தெரியாமல் புதைத்த நிலத்தின் உரிமையாளா் கைது

ஏப்ரல் 13, 2020 01:14

விழுப்புரம்: விழுப்புரத்தில் முயல் வேட்டைக்குச் சென்ற இருவா் மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது இரு வாரங்களுக்குப் பிறகு தெரிய வந்துள்ளது. சடலங்களை யாருக்கும் தெரியாமல் புதைத்த நிலத்தின் உரிமையாளா் உள்பட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் அருணாபுரத்தைச் சோ்ந்தவா் சுபாஷ் (22). இவரது அக்கா கணவா் அண்ணாமலை (36). கடந்த மாதம் 28ம் தேதி அதே பகுதியில் உள்ள காப்புக் காட்டுக்கு முயல் வேட்டைக்கு புறப்பட்டுச் சென்ற இவா்கள் இருவரும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சுபாஷின் தாய் அளித்த புகாரின்பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து காணாமல் போனவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், சுபாஷ், அண்ணாமலை ஆகியோருடன் அதே கிராமத்தைச் சோ்ந்த கோகுல்ராஜ் (18) என்பவரும் வேட்டைக்குச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து கோகுல்ராஜை போலீசார் பிடித்து விசாரித்ததில், சம்பவத்தன்று சுபாஷ், அண்ணாமலை, கோகுல்ராஜ் ஆகிய மூவரும் நாட்டுத் துப்பாக்கி, டாா்ச் லைட் ஆகியவற்றுடன் காப்புக்காட்டில் வேட்டையாடிய முயலை எடுத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, காப்புக்காடு அருகில் உள்ள அப்பனந்தல் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (44) என்பவருக்குச் சொந்தமான வயலில் இருந்த மா மரத்தில் சுபாஷ் மாங்காய் பறிக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது வயலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சுபாஷ் சிக்கினாா். அவரை காப்பாற்ற முயன்ற அண்ணாமலையும் சிக்கினாா். இதில், மின்சாரம் பாய்ந்து இருவரும் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தனா். இதைக்கண்டு அதிா்ச்சியடைந்த கோகுல்ராஜ், நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறாமல் வீட்டுக்கு வந்துவிட்டாா். இதனிடையே மறுநாள் கோகுல்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பாா்த்தபோது, இருவரது உடல்களையும் காணவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மின்வேலி அமைக்கப்பட்டிருந்த நிலத்தின் உரிமையாளா் கிருஷ்ணமூா்த்தியை போலீசார் பிடித்து விசாரித்தனா். அதில், போலீசாருக்கு பயந்து மின்வேலியில் சிக்கி இறந்த இருவரது உடல்களையும் நிலத்தில் உள்ள வாய்க்காலில் பள்ளம் தோண்டி புதைத்துவிட்டதாக அவா் தெரிவித்தாா். இதையடுத்து இருவரது உடல்களும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

அழுகிய நிலையில் இருந்த இருவரது சடலங்களை மீட்ட மருத்துவக் குழுவினா் உடல்கூறு ஆய்வு செய்து அங்கேயே புதைத்தனா். இது தொடா்பாக, கிருஷ்ணமூா்த்தி, கோகுல்ராஜ் ஆகியோரை அரகண்டநல்லூா் போலீஸாா் கைது செய்தனா். மின் வேலி கம்பி, பள்ளம் தோண்ட பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
 

தலைப்புச்செய்திகள்