Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொழிற்சாலைகள் மூடல்: மாசு குறைந்ததால் தூய்மையானது கங்கை நதி

ஏப்ரல் 14, 2020 07:17

லக்னோ : ஊரடங்கு உத்தரவு காரணமாக, தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், கங்கை நீரில் மாசு குறைந்து, குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளதாக, சுற்றுச் சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புனித நகரங்களுள் ஒன்றான வாரணாசி (காசியில்) கங்கை நதி பல்வேறு வகையில் தனது தூய்மையை இழந்து வருகிறது. மத வழிபாடு, மற்றும் சடங்கு முறைகளாலும் தண்ணீர் அசுத்தமாகிறது. மேலும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் ஆகிய பகுதிகளுக்கு இடையே, ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுகள், கங்கை நதியில் கலப்பதால், நதி நீர், மிகவும் மாசு அடைந்துள்ளதாகவும், இதை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளதாகவும் சுற்றுச் சூழல் நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர். 21 நாள் இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்தும் ஏராளமான கழிவு நீர், கங்கை நதியில் கலந்து, மாசை அதிகரித்து வந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்களும், வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கி கிடக்கின்றனர். இதனால், கங்கை நதியில் கழிவுகள் கலப்பது முற்றிலும் குறைந்துள்ளது. ஹரித்வார் மற்றும் வாரணாசியில், இறந்தவர்களின் உடல்களை கங்கையில் துாக்கி வீசுவதும் குறைந்து உள்ளது. புனித நீராடுவதற்காக, கடந்த சில வாரங்களாக யாரும் வரவில்லை.

இது குறித்து சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:கங்கை நதியில், மாசு முற்றிலும் குறைந்துள்ளது. எந்த கழிவுகளும் நதியில் கலப்பது இல்லை. இதனால், நதி நீரின் தரம் அதிகரித்துள்ளது. இப்போது மக்கள் குடிப்பதற்கு ஏற்ற வகையில் நீரின் தரம் உள்ளது. ஏற்கனவே இருந்த மாசில், 50 சதவீதம் குறைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக, உ.பி., உத்தரகண்ட் மாநிலங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால், கங்கையில் நீரோட்டமும் அதிகரித்து உள்ளது. இதே நிலை எதிர்காலத்திலும் தொடர்ந்தால் அல்லது தொழிற்சாலைகளுக்கு கடும் கட்டுப்பாடு விதித்தால், கங்கை நதி நீரின் தரம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்