Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் முழுவதும் மக்கள் மாஸ்க் அணிவதைக் கட்டாயம் ஆக்க வேண்டும்: அன்புமணி

ஏப்ரல் 14, 2020 07:41

சென்னை: ஊரடங்கை பிரதமர் 19 நாட்கள் நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும், அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும், பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (ஏப்.14) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு ஆணையை மே மாதம் 3-ம் தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி ஆணையிட்டிருக்கிறார். மக்களைக் காக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டவாறு இந்தியாவில் ஊரடங்கை நடைமுறைப்படுத்தும் சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்ததால்தான் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது சாத்தியம் ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையத் தொடங்காத நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுவது தவிர்க்க முடியாதது ஆகும்.

மக்களைக் காக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் அதை மதித்து நடக்க வேண்டும்; தேவையின்றி வெளியில் வருவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான மற்றொரு நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கியதுடன் நாட்டு மக்கள் அனைவரும் வெளியில் வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். நோய்ப் பரவலைத் தடுக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முகக் கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கி மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையரும் ஆணையிட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதற்கும் இதை நீட்டிக்க மாநில அரசும், மாவட்ட ஆட்சியர்களும் முன்வர வேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்