Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலவை எந்திரங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைப்பு: 30 ஆயிரம் கட்டிட தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு

ஏப்ரல் 14, 2020 09:54

தஞ்சை: ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் 30 ஆயிரம் கட்டிட தொழிலாளர்கள் கடந்த 19 நாட்களாக வேலை இழந்து தவித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை உயர்த்தி வழங்கவேண்டும் என அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது.

அத்தியாவசிய தேவைக்கான காய்கறிகடை, மளிகைக்கடை, மருந்துக்கடை போன்ற கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் நகைக்கடைகள் பூ மார்க்கெட் சிறு தொழில்கள் என அனைத்து வகையான தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் கட்டிட தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

விவசாய பணிகளுக்கு எந்தவித தடையும் இல்லை என்று அரசு அறிவித்து உள்ளதால் விவசாய தொழில்கள் தங்கு தடையின்றி நடந்து வருகின்றன. ஆனால் கட்டிட தொழில்கள் நடைபெறவில்லை. மேலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருட்களும் வாங்க முடியவில்லை. இதனால் சிறிய கட்டிடம் முதல் பெரிய கட்டிடங்கள் வரையிலான கட்டுமான பணிகள் முடங்கிப்போய் உள்ளன. இதனால் கட்டிட தொழிலாளர்களும் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேல் கட்டிட தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். தஞ்சை மாநகரிலும் பல்வேறு பகுதிகளில் கட்டிட தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த 19 நாட்களாக வேலையின்றி வருமானம் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கட்டிட பணிகள் எதுவும் நடைபெறாததால் கட்டிட பணிக்கு கொண்டு செல்லப்படும் கலவை எந்திரங்களும் ஆங்காங்கே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சை சீனிவாசபுரம் ராஜப்பா நகர் பகுதிகளில் கலவை எந்திரங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே கட்டிட தொழிலாளர்கள் தங்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.1000 நிவாரணத்தொகை போதுமானது அல்ல. அதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

மூவேந்தர் அனைத்து கட்டிட அமைப்புசாரா தொழிலாளர் சங்க செயல் தலைவர் கனகராஜ் கூறுகையில்; ஊரடங்கு உத்தரவால் கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர். கட்டுமான தொழில்கள் முடக்கப்பட்டதால் பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வேலை இழந்த கட்டிட தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண தொகை போதாது. அதனை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதிக்குப்பின் உள்ள நல வாரிய அட்டைகள் புதுப்பிக்கப்பட முடியாத நிலையில் இருப்பதால் அவர்களுக்கும் நிவாரணத்தொகையை அரசு வழங்க வேண்டும். 

கட்டிட பணிகளில் பெரும்பாலும் தனித்தனியே நின்று கொண்டு தான் பணிபுரிவார்கள். எனவே சிறிய கட்டிட பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும். உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன் வேலை செய்து தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.

தாய்திருநாடு கட்டிட உடலுழைப்பு தொழிலாளர் சங்க மாநில தலைவர் சேகர் கூறுகையில்; ஊரடங்கு உத்தரவால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. கட்டிட தொழில்களும் அடியோடு முடங்கி உள்ளன. தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டிட தொழிலாளர்கள்
பதிவு செய்யாத கட்டிட தொழிலாளர்கள் மீனவ தொழிலாளர்கள் தரைக்கடை வியாபாரிகள், தொழிலாளர்கள் என தமிழகத்தில் கோடிக்கணக்கானோர் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது எந்த வகையிலும் போதாது. எனவே அனைத்து தொழிலாளர்களுக்கும் மிக குறைந்தது ஒரு குடும்ப அட்டைதாரருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.

தலைப்புச்செய்திகள்