Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அரசிடம் நிறைய பணம் இருக்கிறது; மக்களுக்கு தராமல், என்ன ஊரடங்கு நீட்டிப்பு: ப.சிதம்பரம் ஆதங்கம்

ஏப்ரல் 14, 2020 01:21

சென்னை: "மத்திய அரசிடம் பணம் இருக்கு. ஆனால் அதனை வழங்காமல் உள்ளது. "ஊரடங்கு நீட்டிப்பு" என்பதை தவிர பிரதமர் உரையில் புதுசா எதுவுமே இல்லையே," என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்று ஊரடங்கு உத்தரவு. இந்த ஊரடங்கு அறிவித்த நாளில் இருந்தே தொழிலாளர்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு போதுமான நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தியதை போலவே ப.சிதம்பரமும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த சமயத்தில்தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.70 லட்சம் கோடிக்கான நிதியுதவியை அறிவித்தார். தொடர்ந்து 2வது நிதியுதவி பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சொல்லி இருந்தார்.

ஆனால், அதற்கான எந்த அறிவிப்பும் அடுத்த சில நாட்களில் வெளியாகவில்லை என்றதுமே ப.சிதம்பரம் மறுபடியும் ஒரு ட்வீட் போட்டிருந்தார். "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்த 2வது நிதியுதவி திட்டம் எங்கே? முதலாவது நிதியுதவி திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, 2வது திட்டத்தை அறிவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

"ஊரடங்கு நீடித்தாலும் மக்கள் வாழ வேண்டுமே? 21 நாட்களாகத் தவிக்கும் ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் எதிர்பார்ப்பது பண உதவி. மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ 30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டுடைய பணம், நம்முடைய பணம். இந்த ரூ 30 லட்சம் கோடியில் ரூ 65,000 கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தருவாரா? மாட்டாரா? என்பது தான் கேள்வி. நம்பிக்கையுடன் பிரார்த்திக்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்" என்றார் ப.சிதம்பரம்.

இந்நிலையில் சொன்னபடியே பிரதமர் உரையாற்றினார். எதிர்பார்த்தபடியே ஊரடங்கையும் நீட்டித்தார். ஆனால், நிதி பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லாமல் அந்த உரை முடிந்தது. இதற்குதான் ப.சிதம்பரம் தன்னுடைய கருத்தை ஒன்றுக்கு 4 ட்வீட்களாக போட்டு வெளிப்படுத்தி உள்ளார்.
"பிரதமர் மோடியின் உரையில் ஊரடங்கு நீட்டிப்பு என்பதை தவிர எதுவும் புதுசா இல்லை. ஏழைகளின் வாழ்வாதாரமும், உயிர்வாழ்தலும் மத்திய அரசுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. கொரோனா தடுப்புக்கு அதிகம் நிதி தேவை என்ற மாநில அரசுகளின் கோரிக்கைக்கு பிரதமர் உரையில் பதில் இல்லை. பொருளாதார அறிஞர்களின் அறிவுரைகளை பிரதமர் கருத்தில் கொள்ளவில்லை.

ரகுராம் ராஜன், அபிஜித் பானர்ஜி, பிரபாத் பட்நாயக் ஆகிய நிபுணர்களின் யோசனை விழலுக்கு இறைத்த நீர் போல ஆகிவிட்டது. 19 நாட்கள் ஊரடங்கை நீட்டித்தும் நலத்திட்டங்கள் எதையுமே அறிவிக்கவில்லை. அரசிடம் பணம், உணவு பொருட்கள் இருந்தும் அதனை வழங்காமல் உள்ளது என்று காட்டமாக தெரிவித்துள்ளார். எனினும் பிரதமர் ஏதாவது முக்கிய நலத்திட்டங்கள் அறிவிக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்