Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சையில் காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை

ஏப்ரல் 15, 2020 07:18

தஞ்சை: தஞ்சை அருகே காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சையை அடுத்த மருங்குளத்தை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (64). இவர் தஞ்சை தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவராக இருந்து வந்தார். மருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவராகவும் இருந்து வந்தார். சுபாஷ் சந்திரபோஸ் தனது ஸ்கூட்டரில் மருங்குளத்தில் இருந்து கறம்பக்குடி செல்லும் சாலையில் நாகப்ப உடையான்பட்டியில் உள்ள தனது வாழை தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார்.

இந்த நிலையில் 12 மணி அளவில் வாழைத்தோட்டம் வழியாக மாடு மேய்க்க வந்தவர்கள் சுபாஷ் சந்திரபோஸ் பின்னந்தலையில் வெட்டுப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சேதுராமன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் சாலையில் ஓடி அருகில் உள்ள மற்றொரு தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் யாரையும் கவ்வி பிடிக்காமல் திரும்பி வந்து விட்டது.

இதையடுத்து சுபாஷ் சந்திரபோசின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வாழை தோட்டத்துக்கு வந்த சுபாஷ் சந்திரபோசை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவருடைய மூத்த மகள் இந்திரா (32) கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்