Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கையையே புரட்டி போட்ட கொரோனா

ஏப்ரல் 15, 2020 07:43

திருச்சி: கொரோனாவால் சாலையோர வியாபாரம் முடங்கியது. திருச்சி உள்ளிட்ட நகர்ப்புற ஏழைகள் முறைசாரா தொழில்களை நம்பியே காலந்தள்ளி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் சாலையோர வியாபாரங்களை நம்பி வாழ்க்கை நடத்தி வருபவர்கள். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் சாலையோர வியாபாரம் முடங்கிபோனது.

தினமும் உழைத்தால்தான் வருவாய் என்ற நிலைப்பாட்டுடன் இருந்த நிலையில் கொரோனா என்னும் கொள்ளை நோய் தடுப்பு நடவடிக்கையால் சாலையோர கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் அவர்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது. திருச்சி மாநகரை பொறுத்தவரை சாலையோர வியாபாரிகள் அதிகமாக தொழில் நடத்தியது சத்திரம் பஸ் நிலையம் மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளில்தான். தெப்பக்குளம் பகுதி, என்.எஸ்.பி. சாலை, பெரியகடை வீதி, காந்தி மார்க்கெட், சிங்காரத்தோப்பு, பாலக்கரை, திருச்சி மத்திய பஸ் நிலையம், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், பொன்மலை, அரியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர்.

ஒவ்வொரு வியாபாரியும் தினமும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வருவாய் ஈட்டுவார்கள். அவர்களுக்கு முதலீடு போக கையில் தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை லாபம் கிடைத்து வரும். தற்போது ஆங்காங்கே தள்ளுவண்டிகளில் விற்பனை செய்த பொருட்களை தார்ப்பாய் போட்டு கட்டி வைத்து சாலையோரம் கேட்பாரற்று நிற்கிறது.

இந்த தொழிலில் படிக்காதவர்கள் முதல் என்ஜினீயரிங் படித்தவர்கள் வரை கவுரவம் பார்க்காமல் சுயவேலைவாய்ப்பாக செய்து வந்தனர். கடந்த 21 நாட்கள் ஊரடங்கால் ரூ.1 கோடிக்கு மேல் சாலையோர வியாபாரிகளின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டைகள் முழுமையாக எல்லோருக்கும் கிடைக்க வில்லை. அரசு நிவாரணம் வழங்குவதாக அறிவித்தாலும் கூட பாதிபேர்தான் பயன்பெறும் நிலை உள்ளது. ஏனென்றால் அவர்களின் வாழ்வாதார திட்டத்திற்கான கணக்கெடுப்பு முறையாக எடுக்கவில்லை என்ற காரணம் கூறப்படுகிறது.

இருப்பினும் முறையான அடையாள அட்டை உள்ளவர்களையாவது வீதி வீதியாக பொருட்களை விற்பனை செய்திட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதே வேளையில் கொரோனா வீரியம் அதிகரித்து வரும் காரணத்தால் அவர்களின் கோரிக்கை சாத்தியமா என்பது கேள்விக்குறிதான்.

தலைப்புச்செய்திகள்