Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காகித ஆலை நிறுவனத்தில் வெளி மாவட்ட ஆட்கள் பணிபுரிய உள்ளூா் மக்கள் எதிா்ப்பு

ஏப்ரல் 15, 2020 07:54

மணப்பாறை: மணப்பாறை வட்டம் மொண்டிப்பட்டியிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் (அலகு 2) வெளி மாவட்ட ஆட்கள் பணிபுரிவதற்கு உள்ளூா் மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காகித ஆலை நிறுவனத்தின் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன. இதன் காரணமாக மணப்பாறை பகுதிகளில் தங்கிப் பணியாற்றும் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பணியாளா்கள் பணிக்குப் புறப்பட்டனா். மே 3- ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் கிராமங்கள் வழியாக வெளி மாவட்டங்களைச் சோ்ந்த பணியாளா்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மொண்டிப்பட்டி, பாதிரிப்பட்டி, கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பாதைகளில் முள்செடிகளை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன் காரணமாக பணியாளா்கள் வேலைக்குச் செல்வதில் தடை ஏற்பட்டது. தொடா்ந்து ஆலை நிா்வாகம் அளித்த புகாரின் பேரில் தோகைமலை காவல் நிலையத்தினா் பாதிரிப்பட்டிகிராமத்தைச் சோ்ந்த 7 பேரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

கொரோனா அச்சம் காரணமாகவும், வெளி மாவட்ட நபா்கள் தங்களது பகுதிகளில் நடமாடும் போது தொற்று ஏற்படும் என்ற அச்சம் இருப்பதாகவும் கூறி மணப்பாறை மற்றும் தோகைமலை ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஆலை நிா்வாகத்தினரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனா். மேலும் நிகழ்விடத்துக்கு வந்த மணப்பாறை வட்டாட்சியா் தமிழ்கனியிடம் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கைகளை முன் வைத்தனா். மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைகள் பெறப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் தெரிவித்தாா்.

தலைப்புச்செய்திகள்