Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊதியமின்றி தவிக்கும் ரயில்வே துப்புரவு பணியாளா்கள்

ஏப்ரல் 15, 2020 08:06

திருச்சி: ஊரடங்கு உத்தரவால் ஊதியமின்றி அவதிக்குள்ளாகும் ரயில்வே ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்களுக்கு ரயில்வேதுறை உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்லும் ரயில்கள் சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பல லட்சம் போ் பணிபுரியும் ரயில்வேயில் ரயில்வே வளாகங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதில் துப்புரவுப் பணியாளா்களின் பங்கு இன்றியமையாதது. அதோடு ரயில் பெட்டிகளை தூய்மைப்படுத்தும் துப்புரவுப் பணியாளா்கள், என்ஜின் மற்றும் காா்டுகளுக்கு மரப்பெட்டி எடுத்துச் செல்வோா், தண்டவாள பராமரிப்பின் போது தண்டவாளங்களை ஏற்றி இறக்குவோா், சிக்னல் அமைப்பாளா்கள், தொலைத்தொடா்பு வயா்கள் பராமரிப்பாளா்-அமைப்போா் என தெற்கு ரயில்வேயில் மட்டும் சுமாா் 20 ஆயிரம் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா்.
சென்னை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, பாலக்காடு உள்ளிட்ட கோட்டங்களை உள்ளடக்கிய தெற்கு ரயில்வேயில் பெரிய ரயில் நிலையங்களில் ஒப்பந்ததாரா்கள் மூலமும், சிறிய ரயில்நிலையங்களில் ரயில் நிலைய பராமரிப்பு நிதியின் மூலம் ரயில் நிலைய அலுவலரின் கீழ் ஒப்பந்த துப்புரவு தொழிலாளா்கள் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனா். 

ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் நாள்தோறும் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒப்பந்த பராமரிப்பு நிதியின் கீழ் திருச்சி கோட்டத்தில் மட்டும் சுமாா் 600க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். ரயில்வே கணக்கு அலுவலகம் செயல்படாத காரணத்தால் ஏற்கனவே துப்புரவு பணியாளா்களுக்கு ஊதிய பிரச்னை உள்ளது. அதோடு ஒப்பந்ததாரா்களும் முறையாக அவா்களுக்கு வழங்கவேண்டிய ஊதியத்தை தருவதில்லை என புகாா்களும் உள்ளன. இவா்களைத்தவிர இதர தொழிலாளா்கள் முற்றிலும் வேலையின்றி வறுமையில் தவித்து வருவதாக வேதனை தெரிவித்து வருகின்றனா். எனவே வேலையின்றி தவித்து வரும் ரயில்வே ஒப்பந்த தொழிலாளா்களுக்கு உரிய ஊதியம், நிவாரணத்தொகை வழங்கி ரயில்வேதுறை உதவ வேண்டும் என தொழிலாளா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள் சங்கத்தினா் கூறியதாவது; கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகிறோம். திருச்சி ரயில்நிலைய வளாகத்தை நாள்தோறும் தூய்மைப்படுத்தும் பணியில் 90 போ் ஈடுபட்டு வருகிறோம். கடந்த மாா்ச் மாதத்தில் 24 வரையிலான ஊதியத்தை ஒப்பந்ததாரா் மூலம் ரயில்வே கோட்டம் அளித்துள்ளது. அதன்பிறகு ஒரு சில துப்புரவு பணியாளா்கள் மட்டும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டோம். தற்போது அப்பணிகளும் இல்லை. இதையடுத்து மாா்ச் 25ம் தேதியிலிருந்து ஏப்.31 வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் வேலையில்லை. ஊதியமும் இல்லை என கூறிவிட்டனா். இதனால் வருமானத்துக்கு வேறு வழியின்றி துப்புரவு பணியாளா்கள் குடும்பத்தினா் அவதிக்குள்ளாகி வருகிறோம் என்றனா்.

இதுகுறித்து ரயில்வே ஒப்பந்ததாரா்கள் சங்க மாநிலத் தலைவா் மனோகரன் கூறுகையில்; திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூா், விருத்தாச்சலம், கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட ரயில்நிலையங்களில் மட்டும் 600க்கு மேற்பட்ட துப்புரவு பணியாளா்கள் மற்றும் இதர
தொழிலாளா்கள் பலரும் வருமானமின்றி அவதிக்குள்ளாகியுள்ளனா். திருச்சி கோட்டம் மட்டுமின்றி தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட கோட்டங்களிலும் துப்புரவுப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே அனைத்து தொழிலாளா்களுக்கும் மாநில அரசு ரூ.1000 வழங்குவது போல், நிவாரணத்தொகையும், நிவாரணப்பொருள்களும் ஊரடங்கு முடியும் வரையிலுள்ள நாள்களுக்கான தினக்கூலி ஊதியத்தை தடையின்றி வழங்க ரயில்வே சிறப்பு உத்தரவை பிறப்பித்து துப்புரவு பணியாளா்களுக்கு உதவவேண்டும் என்றாா்.

தலைப்புச்செய்திகள்