Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் 18 மருத்துவர்கள் குழு அமைப்பு: கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை

ஏப்ரல் 15, 2020 01:36

திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் 18 மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சை அளிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர்  சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த மருத்துவ குழுவினருக்கு 18 கார்கள் வழங்கப்பட்டு நாள்தோறும் 12 மணிநேரம் ரோந்து சுற்றி வந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகத்திலிருந்து இந்த வாகனங்களை மாநகராட்சி ஆணையர்  சிவசுப்பிரமணியன் வழியனுப்பி வைத்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் தற்போது 43 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தொற்று மேலும் பரவாமல் தடுக்க மாநகராட்சியால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாகத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இந்த மருத்துவ குழுவினர் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் சளி இருமல் யாருக்கும் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் சளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து இந்தக் குழுவானது ஆய்வு மேற்கொள்ளும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களுக்கு ஏதேனும் சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். தற்காலிக காய்கறி சந்தைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்ததன் பேரில் திருச்சி மாநகராட்சி சார்பில் தள்ளுவண்டிகளில் அந்தந்த பகுதிகளில் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் காய்கறி சந்தைக்கு வராமல் அந்தந்த பகுதியிலேயே தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.
மேலும், காய்கறி மார்க்கெட் நிரந்தரமாக மூடுவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநகராட்சி சார்பில் தற்காலிக காய்கறி உள்ளிட்ட 12 இடங்களில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் அந்த சுரங்கங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டு விட்டது.

தனி நபர்கள் தன்னார்வலர்கள், ஆதரவற்றோர், சாலையோரம் வசிப்போருக்கு தாங்கள் நேரடியாக உணவு வழங்க வேண்டாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் தற்போது 11 அம்மா உணவகங்களில் காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல நாள்தோறும் 600 பேருக்கு மாநகராட்சி சார்பில் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. தன்னார்வலர்கள் உணவு வழங்க விரும்பினால் நேரடியாக வழங்காமல் அதனை மாநகராட்சி இடம் கொடுத்தால் பணியை மேற்கொள்ளும்.
இவ்வாறு  மாநகராட்சி ஆணையர்  சிவசுப்பிரமணியன் கூறினார்.

தலைப்புச்செய்திகள்