Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊர் சுற்றினால் உங்கள் வாகனம் பறிமுதல்: போலீஸார் எச்சரிக்கை

ஏப்ரல் 15, 2020 01:39

திருச்சி: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதனை மீறி ஊர் சுற்றியவர்களின் 2,500-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருச்சி ஆயுதப்படை மைதனாத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக நாடு தழுவிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. இந்நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்படுகிறது. ஆனால், அப்படியிருந்தும் பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்க போலீஸ் கடுமையாக போராடி வருகின்றனர்.

இதனிடையே திருச்சி மாநகரத்தில் மட்டும் இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் நிறுத்தப்பட்டிருப்பதால் வெயில், மழை என  துருப்பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருவதால் திருச்சி மட்டுமல்லாமல் பெரும்பாலான நகரங்களில் இதே நிலை தான். இதனால் ஊரடங்கு முடிந்து வாகனங்களை மீட்கும் போது பெரும்பாலான வாகனங்கள் பழுதடைந்த நிலைக்கு சென்றுவிடும்.

திருச்சியை பொறுத்தவரை அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் மட்டும் செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால், அந்த அனுமதியையும், விதிமுறையையும் காற்றில் பறக்கவிட்டு ஊர்சுற்றிய வாலிபர்களின் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 188, 269, மற்றும் 279 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு முடிந்தவுடன் எளிதாக இரு சக்கர வாகனங்களை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் தேவையின்றி யாரும் வெளியே சுற்ற வேண்டாம் என்றும், தற்போது ஊரடங்கு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் தற்போது பின்பற்றும் கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு திருச்சி மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்