Sunday, 6th October 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்த 3 பேர் பலி

ஏப்ரல் 15, 2020 01:55

கடலூர்: கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கள்ளச்சந்தையில் மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுவதால், மதுப்பிரியர்கள் குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயம் மற்றும் மாற்று போதையை தேடிச்செல்கின்றனர். கள்ளச்சாராயம் குடிப்பதால் தமிழகத்தில் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சந்திரகாசி என்பவருக்கு நேற்றுமுன்தினம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த எழில்வாணன், மாயகிருஷ்ணன், ஆணையம்பேட்டையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் ஆகியோரும் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஆணையம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்ற வாலிபர், கடலூர் சிப்காட்டில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கப்படும் தனியார் மருந்து தொழிற்சாலையில் பணியாற்றி வருவதும், அவர் தொழிற்சாலையிலிருந்து ஒரு லிட்டர் மெத்தனாலை தனது கிராமத்திற்கு எடுத்து வந்ததும், மேலும் அதை போதைக்காக பயன்படுத்தும் நோக்கத்தில் அதனுடன் தண்ணீரைக் கலந்து சுந்தரராஜ், சந்திரகாசி, எழில்வாணன், மாயகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து குமரேசன் குடித்தது விசாரணையில் தெரியவந்தது. 
இதுதொடர்பாக குமரேசனை கைது செய்த போலீசார், சம்பந்தப்பட்ட அந்த தொழிற்சாலைக்கும் சீல் வைத்தனர்.
இதனிடையே நேற்றுமுன்தினம் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சந்திரகாசி உயிரிழந்த நிலையில், நேற்று மாயகிருஷ்ணன், சுந்தரராஜ் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மெத்தனால் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எழில்வாணனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போதைக்காக மெத்தனால் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்