Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடியின் செல்வாக்கு 52% ஆக உயர்வு

மார்ச் 11, 2019 05:37

புதுடில்லி : புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பிரதமர் மோடியின் செல்வாக்கு 52 சதவீதமாக அதிகரித்திருப்பதாக டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இறுதிகட்ட செயல்பாடுகள் குறித்து பிப்ரவரி 5 முதல் 21 வரை டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் அமைப்புக்கள் கருத்துக்கணிப்பு நடத்தின. நாடு முழுவதும் 690 இடங்களில் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் 14,431 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மோடியின் செல்வாக்கு 7 சதவீதம் அதிகரித்து 52 சதவீதமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விபரம் : 
செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் மோடி - 52 % ; ராகுல் - 27 %; மாநில தலைவர்கள் - 7.3 % பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் மோடிக்கு 44.4 % பேரும், ராகுலுக்கு 30 % பேரும், மாநில தலைவர்களுக்கு 13.8 % செல்வாக்கு இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

2019 லோக்சபா தேர்தலில் மோடிக்கு மாற்றான தலைவர்களில் ராகுலுக்கு 43 % பேர் ஆதரவும், 40 % பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். பா.ஜ., அரசு தேர்தல் வாக்குறுதிகளை குறைந்த அளவே நிறைவேற்றி உள்ளதாக 46 % பேரும், பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டதாக 27 % பேரும் தெரிவித்துள்ளனர். 
வரும் தேர்தல் பிரசாரத்தின் போது வேலைவாய்ப்பு மிகப்பெரிய பிரச்னையாக பேசப்படும் என 40 % பேரும், விவசாயிகளுக்கான திட்டம் என 17.7 % பேரும், ராமர் கோயில் விவகாரம் என 14 % பேரும் தெரிவித்துள்ளனர். மோடி ஆட்சியில் வேலையில்லாதவர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக 40 % பேரும், வாய்ப்புக்கள் அதிகரித்திருப்பதாக 24 % பேரும், வழக்கமான வேலையிழப்பு தான் என 36 % பேரும் தெரிவித்துள்ளனர். 

மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட வருமான வரி சலுகை நிம்மதி அளிக்கிறதா என்ற கேள்விக்கு தாமதமான அறிவிப்பு என 33 % பேரும், இன்றைய தேதிக்கு சிறிது நிம்மதி என 30 % பேரும், தேர்தலுக்கான அறிவிப்பு என 24 % பேரும் தெரிவித்துள்ளனர். பிரதமரின் வேளாண் திட்டங்கள் குறித்த கேள்விக்கு, விவசாயிகளுக்கு பயனளிக்காது என 30 % பேர் தெரிவித்துள்ளனர். 
 

தலைப்புச்செய்திகள்