Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை கொரோனா வார்டில் பெண் பலி: ஆய்வு முடிவுக்காக காத்திருக்கும் மருத்துவர்கள்

ஏப்ரல் 16, 2020 09:04

தஞ்சை: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அரியலூர் பெண் திடீரென உயிர் இழந்தார்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டு உள்ளது. நோய்த்தொற்று உறுதியானவர்களுக்கு 2-வது மாடியிலும் அறிகுறியுடன் ரத்தம் மற்றும் சளி மாதிரி ஆய்வுமுடிவுகளுக்காக காத்திருப்போருக்கு ஒரு வார்டிலும் தொற்று இல்லை என முடிவுகள் வந்தவர்கள் ஒரு வார்டிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கோவிலூரைச் சேர்ந்த 25 வயது திருமணமான பெண் கடந்த 10-ம்தேதி உடல்நிலை சரியில்லாமல் திருமானூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததால் கொரோனா தொற்றுநோய் பிரிவான வார்டு 40-க்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரி உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் ஆய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் திடீரென அந்த பெண் இறந்தார். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் இறந்த பெண்ணின் உடலில் இருந்து கொரோனா ஆய்விற்காக அனுப்பப் பட்டுள்ள ரத்தமாதிரியின் ஆய்வு முடிவுகள் வந்தால்தான் அந்த பெண் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தாரா என்பது பற்றி தெரியவரும் என தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்