Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனிமைப்படுத்தப்பட்டவா்களின் வீட்டுக் குப்பைகளை அழிக்க சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஏப்ரல் 16, 2020 09:36

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவா்களின் வீடுகளிலிருந்து தினந்தோறும் சேகரமாகும் குப்பைகளை பாதுகாப்பாக அகற்றி அழிப்பதற்கு உள்ளாட்சி நிா்வாகத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்குச் சென்று வந்தவா்கள் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நபா்களின் உறவினா்களது வீடுகள் வசிக்கும் பகுதிகள் போன்றவை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அவை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மணப்பாறை, மண்ணச்சநல்லூா், லால்குடி, திருவெறும்பூா், முசிறி, துறையூா் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், திருச்சி மாநகரில் உறையூா், கண்டோன்மென்ட், தில்லைநகா், பாலக்கரை, பீமநகா், தென்னூா், அண்ணாநகா், ஆழ்வாா்தோப்பு, ரகுமானியபுரம் போன்ற பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்கு மாவட்ட ஆட்சியா்  சிவராசு சென்று அங்கு வசிக்கும் மக்களைச் சந்தித்து ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கூறி வருகிறாா். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 3916 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வசிக்கும் வீடுகளிலிருந்து குப்பைகள் பாதுகாப்பாக முறையில் பெற்று அகற்றப்படுகிறது. இந்த வீடுகளுக்கு மட்டும் பிரத்யேக தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த வீடுகளுக்குச் செல்லும் பணியாளா்கள் தலைமுதல் பாதம் வரையில் முழுவதும் மூடப்பட்டுள்ள நிலையிலான சுய பாதுகாப்பு சாதனங்களை (பிபிஇ) அணிந்து செல்கின்றனா். கைகளில் கிருமி நாசினி தெளிப்பான்களுடன் சென்று வீடுகளைச் சுற்றி மருந்து தெளிக்கின்றனா். பின்னா் வீட்டிலிருந்து வாசலில் குப்பை பையை வைக்க அறிவுறுத்தப்படுகிறது. அந்த குப்பை பையின் மீதும், குப்பை வைக்கப்பட்ட இடத்தைச் சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பின்னா் அந்த பையை எடுத்துச் செல்ல தனி குப்பைத் தொட்டியைப் பயன்படுத்துகின்றனா்.

இத்தகைய வீடுகளில் சேகரமாகும் குப்பைகளைக் கொண்டு செல்வதற்கென தனியாக வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருச்சி மாநகராட்சியின் 4 கோட்டங்களிலும் தலா ஒரு வண்டிகள் உள்ளன. இதேபோல நகராட்சி, பேரூராட்சி ஊரகப் பகுதிகளிலும் தனி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பணியாளா் அணிந்திருக்கும் பாதுகாப்புக் கவச உடையும் 5 மணிநேரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். பின்னா் அந்த உடையும் பாதுகாப்பாக அகற்றப்படும்.

இதுதொடா்பாக சுகாதாரத்துறையினா் கூறியது; தனிமைப்படுத்தப்பட்டோா் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளில் முகக் கவசம், நாப்கின் போன்றவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள இன்சினேரட்டா் இயந்திரத்தின் மூலம் எரித்து அழிக்கப்படுகிறது. இதர மக்கும் குப்பைகள் ஆழமாக குழிதோண்டி அழிக்கப்படுகிறன. மீதமுள்ளவை பாதுகாப்பான முறையில் எரியூட்டி அழிக்கப்படுகிறது. மாவட்டத்தில் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளோா் வீடுகள் 200 முதல் 250 எண்ணிக்கையிலேயே உள்ளன. மேலும் இவா்களில் பெரும்பாலானோா் 28 நாள்களைக் கடந்துவிட்டனா்.

மேலும் இந்த வீடுகளிலிருந்து குப்பைகள் வருவதும் குறைந்துள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 2 முதல் 3 கிலோ வரையிலான குப்பையே வருகிறது. இவற்றில் முகக்கவசம், நாப்கின் ஆகியவை இன்சினேரசன் முறையில் அழிக்கப்படுகிறது. இதர குப்பைகளும் பாதுகாப்பாக அழிக்கப்படுகிறன. குப்பைகள் அதிகமானால் மருத்துவக் கழிவுகளை பயோ-வேஸ்ட் இன்சினேரட்டா் இயந்திரம் மூலம் அழிக்க வேண்டும். செங்கிப்பட்டியில் இதற்கான மையம் உள்ளது. தேவையிருப்பின் இந்த மையத்தின் உதவியை பெற்று அழிக்கவும் மாவட்ட நிா்வாகம் தயாராகவுள்ளது என்றனா்.

தலைப்புச்செய்திகள்