Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலங்கையில் பரிதவிக்கும் தமிழக ஜவுளி வியாபாரிகள்

ஏப்ரல் 16, 2020 11:26

திண்டுக்கல்: “இலங்கையில் பரிதவிக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 300 ஜவுளி வியாபாரிகளை மீட்க வேண்டும்,” என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக இலங்கையில் சிக்கித்தவிக்கும் அவர்கள் உறவினர்கள் கூறியதாவது: கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தின் சின்னாளபட்டி, அணைப்பட்டி மற்றும் நிலக்கோட்டையை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் 300 பேர் இலங்கை சென்றனர். கடந்த காலங்களைப் போல அங்கேயே தங்கி அவர்கள் வியாபாரம் செய்து வந்தனர். இலங்கையில் சின்னாளபட்டி கண்டாங்கி சேலைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் இவர்கள் முகாமிட்டுள்ளனர்.  தற்போது கொரோனா பாதிப்பால் இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 300 பேரும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கையிருப்பாக வைத்திருந்த பணமும் கரைந்ததால் பெரும் துயரத்தில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் மீட்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடமும் இவர்கள் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் இலங்கையில் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்