Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ரூ.1 கோடி; தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்: ஸ்டாலின்

ஏப்ரல் 16, 2020 03:44

சென்னை: “கொரோனோ வைரஸ் தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி நிவாரண நிதியாக வழங்க வேண்டும்,” என, தி.மு.க. தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய துரிதப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தி.மு.க. அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, நேற்றுமுன்தினம் அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி தர மறுத்தது.

இதையடுத்து காணொலிக் காட்சி மூலம் தி.மு.க. தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று காலை 11 மணியளவில் காணொலிக்காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை ஸ்டாலின் நடத்தினார். அதில், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வாழ்வாதாரங்கள், கொரோனா தடுப்பு பணிகள் பற்றி அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர். இறுதியாக கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி தமிழக அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 சிறப்பு நிவாரண நிதி அளிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காணொலிக் காட்சி மூலம் கூட்டம் நடத்தப்பட்டதால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இதில் கலந்துகொண்டனர். இதனிடையே தொல்.திருமாவளவன் டெல்லியில் இருந்தவாறே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்