Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கிய பாகிஸ்தான்: அதிர்ச்சி தகவல்

ஏப்ரல் 17, 2020 06:47

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீரில், அமைதியை சீர்குலைக்கும் நோக்குடன், பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., இரண்டு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கியுள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுநாள் வரையிலும், ஐ.எஸ்.ஐ., அமைப்பு, உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்து, காஷ்மீரில் வன்முறையை துாண்டி வந்தது.தற்போது, காஷ்மீரிலேயே இரண்டு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி, இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களை துாண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டு, ஆக., 5ல், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஐ.எஸ்.ஐ., அமைப்பு, காஷ்மீரில், டி.எம்.ஐ., எனப்படும், 'தெஹ்ரிக் - இ - மிலட் - இ - இஸ்லாமி' மற்றும் டி.ஆர்.எப்., என்ற இரு அமைப்புகளை உருவாக்கியுள்ளது.

தடை செய்யப்பட்ட, லஷ்கர் - இ - தொய்பாவின் அங்கமாக கருதப்படும், டி.எம்.ஐ., அமைப்பின் தளபதியாக, நயீம் பிர்தோஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம், 'வீடியோ' பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'காஷ்மீரில் உள்ள அனைத்து பிரிவினைவாத இயங்கங்களும் ஒன்று சேர்ந்து, இந்தியாவை எதிர்க்க வேண்டும்' என, அழைப்பு விடுத்துள்ளார்.இதேபோல, டி.ஆர்.எப்., அமைப்பின் தளபதி, அபு அனாஸ் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 'இந்தியாவுக்கு எதிரான போரில், அனைத்து முஸ்லிம்களும் ஒன்று திரள வேண்டும்' என, கேட்டுக் கொண்டு உள்ளார்.

அத்துடன், காஷ்மீர் முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லா, இந்தியா பக்கம் சாயாமல், காஷ்மீரிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும், காஷ்மீர் மக்கள், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தால், கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த வீடியோ பதிவுகள், காஷ்மீரில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, உளவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த மாதம், காஷ்மீரின் சோபூர் மாவட்டத்தில், பரூக் மாலிக், ஷப்கத் அலி தாகு, முசைப் ஹசன் பட், நிசார் அகமது கனி என்ற நான்கு பயங்கரவாதிகள் பிடிபட்டனர். அவர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த, ஆண்ட்ரூ ஜோன்ஸ் என்பவரின் கீழ் பணியாற்றுவதாகவும், அவருடன், 'டெலிகிராம் மெசஞ்சர்' மூலம் தான் தொடர்பில் உள்ளதாகவும், அவரின் முகத்தை பார்த்ததில்லை என்றும் தெரிவித்தனர்.

ஆனால், அதே நபர் 'வாட்ஸ் ஆப்' குழுக்களில், கான் பிலால் என்ற பெயரில் செயல்படுவதும், விசாரணையில் தெரியவந்தது. எனவே, டி.ஆர்.எப்., அமைப்பின் பின்னணியில், கான் பிலால் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பிடிபட்ட பயங்கரவாதிகள் நான்கு பேருக்கும், காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு ஆள் சேர்க்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இளைஞர்களை திரட்டி, ஆயுதங்களை சேகரித்து, அரசியல் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது. பாகிஸ்தானின் இந்த சதியில் ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி, நாசவேலைகளில் ஈடுபடுத்த வேண்டும்; அந்த பழி தன் மேல் விழக் கூடாது என்பதற்காக, பாக்., இரண்டு பயங்கரவாத அமைப்புகளை காஷ்மீரில் உருவாக்கியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

காஷ்மீரில், பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லைப் பகுதிகளில், பாக்., ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த, 12 நாட்களாக, பீரங்கி குண்டுகளை வீசி வருகிறது. நேற்று, கஸ்பா, கிர்னி பகுதிகளில், மக்கள் வசிக்கும் பகுதிகளில், சிறிய குண்டுகள் வீசப்பட்டன. இதில் பாதிப்பு ஏதும் இல்லை. பாக்., தாக்குதலுக்கு, இந்திய ராணுவத்தினர், தகுந்த பதிலடி தந்ததாக, ராணுவ செய்தி தொடர்பாளர், லெப்டினன்ட் கர்னல், தேவேந்தர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்