Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிவில் சர்வீஸ் தேர்வுகள் ரத்து என பரவும் வதந்தி: யு.பி.எஸ்.சி. அதிரடி விளக்கம்

ஏப்ரல் 17, 2020 11:23

கொரோனா வைரஸ் காரணமாக நடப்பு 2020ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக பொய்யான செய்திகள் பரவியதால் அதற்கு  யு.பி.எஸ்.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் யு.பி.எஸ்.சி. தேர்வுகள் குறித்து முடிவு செய்வதற்காக கடந்த ஏப்ரல் 15ம் தேதி அந்த கமிஷனின் உறுப்பினர்கள் கூட்டம் நடத்தினர். தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை செய்தனர்.
இந்நிலையில்தான் திடீர் என்று மராத்தி செய்தி நிறுவனம் ஒன்று கொரோனா காரணமாக 2020ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வுகள் நீக்கப்பட்டு இருப்பதாக செய்திகளை வெளியிட்டது. இந்த செய்தியை கேட்டதும் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் பலர் வரிசையாக யு.பி.எஸ்.சி.க்கு போன் செய்து விசாரிக்க தொடங்கினார்கள். தேர்வு நீக்கமா? என்று விசாரிக்க தொடங்கினார்கள். 

இந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது ஆகும். யு.பி.எஸ்.சி. தேர்வுகளை நீக்குவதாக மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே சமயம் ஊரடங்கு காரணமாக யு.பி.எஸ்.சி. எழுதும் மாணவர்கள் பிற பகுதிகளுக்கு பயணம் செய்ய முடியாது. அதேபோல் யு.பி.எஸ்.சி. தேர்வு 2019ன் பர்சனாலிட்டி டெஸ்ட் எழுதும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு பயணம் செய்ய முடியாது.

இதற்கான புதிய தேர்வு தேதிகள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. மே 3ம் தேதிக்கு பிறகு இதற்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது. யு.பி.எஸ்.சி. 2020ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில், ஏதாவது மாற்றம் செய்யப்பட்டால் அது தொடர்பான அறிவிப்புகள் மத்திய அரசின் யு.பி.எஸ்.சி. பக்கத்தில் வெளியிடப்படும்.
ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு மற்றும் இந்திய புள்ளிவிவர சேவை தேர்வு 2020 ஆகியவை தள்ளிவைக்கப்பட்டதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. மறு தேதி அறிவிக்கப்படாமல் இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. யு.பி.எஸ்.சி. நடத்தும் மற்ற தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும்.

இந்த அறிவிப்புகள் எல்லாம் கண்டிப்பாக யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் உடனுக்குடன் வெளியாகும். யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியாகாத செய்திகள் எதையும் மக்கள் நம்ப கூடாது. இதனால் மக்கள் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் என்று யு.பி.எஸ்.சி கூறியுள்ளது.

தலைப்புச்செய்திகள்