Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குமாரசாமி மகன் நிகில் திருமணம்: ஊரடங்கு நேரத்திலும் திட்டமிட்டபடி நடந்தது

ஏப்ரல் 17, 2020 01:41

நடிகரும் முன்னாள் முதல்வர் குமரசாமியின் மகனுமான இளம் ஹீரோவின் திருமணம் லாக்-டவுன் நேரத்தில் அமைதியாக நடந்தது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, அனிதா தம்பதியின் மகன் நிகில் குமாரசாமி. முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடாவின் பேரனான இவர், ஜாக்குவார் என்ற கன்னட படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஹர்ஷா இயக்கிய சீதாராமா கல்யாணா என்ற படத்தில் நடித்தார். அடுத்து மகாபாரத கதையை கொண்ட குருஷேத்ரா படத்தில் அபிமன்யூ கேரக்டரில் நடித்திருந்தார்.

இதற்கிடையே, கடந்த பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் நிகில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதா, பா.ஜ.க. ஆதரவில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். பலத்த போட்டிக்கு இடையே நடந்த தேர்தலில் சுமலாதா அபார வெற்றி பெற்றார். நிகில் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், நிகிலுக்கு பெண் பார்த்து வந்தனர். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதியை பேசி முடித்திருந்தனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில், நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். திருமணம் நேற்று நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

பிரமாண்டமாக நடத்த தேவகவுடா குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். இதற்காக ராமநகர் பகுதியில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக திருமண ஏற்பாடுகள் திடீரென நிறுத்தப்பட்டன. ஊரடங்கு விதிக்கப்பட்டிருப்பதால் இந்த திருமணம் நடக்குமா? என்று கேள்வி எழுந்தது.

ஆனால், ‘திருமணம் திட்டமிட்டபடி நடக்கும்’ என்று தெரிவித்திருந்தனர். அதன்படி, லாக்-டவுன் நேரத்திலும், கர்நாடக மாநிலம் பிடாடி பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இவர்கள் திருமணம் நேற்று காலை எளிமையாக நடந்தது. இதில், ஹெச்.டி.தேவகவுடா, குமாரசாமி மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்கள் திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், தனது ஆதரவாளர்கள் வீட்டில் இருந்தபடியே மணமக்களுக்கு ஆசிகளை வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆதரவாளர்களை அழைக்க முடியாததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் ஊரடங்கை ஆதரவாளர்கள் யாரும் மீற வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்