Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்டாலினுக்கு இனி பதில் சொல்ல மாட்டேன்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

ஏப்ரல் 17, 2020 01:54

சேலம்: “தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் கேள்விகளுக்கும், அறிக்கைகளுக்கும் இனி பதில் சொல்ல மாட்டேன்,” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வேகம் எடுத்து வரும் நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்றுமுன்தினம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் எதிர்க்கட்சிகள் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை செய்தது. தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்த நிலையில், அவர் எதிர்கட்சிகளுடன் ஆலோசனை செய்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் பழனிசாமி சரியாக செய்யவில்லை. அவருக்கு பக்குவம் போதவில்லை என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் சேலத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்ததாவது:

ஸ்டாலின் பேசுவதை நான் இனி கண்டுகொள்ள மாட்டேன். இனி எதிர்க்கட்சிகள் பேசுவது எதையும் நாங்கள் கருத்தில் கொள்ள மாட்டோம். அவருக்கு நான் இனி பதில் சொல்ல மாட்டேன். உயிரோடு விளையாட வேண்டாம். இது சரியில்லை. தினமும் அவர் அறிக்கை விடுகிறார். அரசை குற்றம் சொல்கிறார். அரசு தனியாக செயல்படவில்லை என்கிறார். ஆனால், மக்களோடு சேர்ந்து அனைத்து அதிகாரிகளும் செயல்படுகிறார்கள்.

குற்றம் சொல்லும் நேரமா இது. நாங்கள் கஷ்டப்படுகிறோம். அதை விட்டுவிட்டு ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார். ஸ்டாலினிடம் ஆலோசனை கேட்க இதில் எதுவும் இல்லை. அவர் என்ன மருத்துவரா? மருத்துவ குழு சொல்லும் ஆலோசனையை கேட்டு நாங்கள் பணிகளை செய்து வருகிறோம். அதுதான் கொரோனாவை தடுக்கும். அரசியல் பிரச்சனை என்றால் அவரிடம் ஆலோசனை கேட்கலாம்.

இது மருத்துவர்கள் தொடர்பான பிரச்னை. இதனால் ஸ்டாலினிடம் ஆலோசனை கேட்க அவசியம் இல்லை. இதை அரசியலாக்கி, தன்னை முன்னிலைப்படுத்த முயல்கிறார். எங்களின் ஒரே நோக்கம் மக்களுக்கு பணி செய்வதுதான். இந்த நோயாளிகளை எப்படி குணப்படுத்துவது என்பதுதான் எங்கள் நோக்கம். எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்வது எங்கள் நோக்கம் இல்லை.

ஸ்டாலின் இதை அரசியலாக்க நினைக்கிறார். அது நடக்காது. அவரின் ஆசை நிறைவேறாது. நாங்கள் எங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம். எதிர்க்கட்சியை நாங்கள் கருத்தில் கொள்ள மாட்டோம். எங்களுக்கு மக்கள்தான் முக்கியம். மக்கள் கருத்துதான் முக்கியம். மக்களை எப்படி காப்பது? இந்த நோயை எப்படி விரட்டுவது? என்பதுதான் எங்கள் நோக்கம். இந்த நேரத்தில் அரசியல் செய்வது தேவையா?.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்