Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு எடுக்கும் அரைகுறை நடவடிக்கைகளை நான் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?: ஸ்டாலின் கேள்வி

ஏப்ரல் 17, 2020 03:40

சென்னை: கொரோனாவை ஒழிக்க மக்கள் நலனில் அக்கறையோடு தி.மு.க. செயல்படுகிறது என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கொரோனாவை ஒழிக்க ஆரம்பத்திலிருந்தே உரிய கருவிகளைப் பெற்று பரிசோதனைகளை விரிவு படுத்தி, விரைவுபடுத்துங்கள் என்று அனைவரும் திரும்பத் திரும்ப சொன்ன பிறகும், அடிப்படையான அந்த நடவடிக்கையில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டு, இப்போது திடீரென்று கொரோனாவே இல்லை என்று முதல்வர் சொல்வது, ‘பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிட்டதாக எண்ணுவதைப் போன்றது’.

மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில்தான் கொரோனா நோய்த் தாக்கம் இருக்கிறது என்று மத்திய அரசு அறிவித்தது. இப்போது 22 மாவட்டங்களுக்கு அதிகமாகப் பரவிவிட்டது என்றும், மூன்றே மூன்று மாவட்டத்தில் தான் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மத்திய அரசு சொல்கிறது என்றால், இதுதான் கொரோனாவை காலத்தே கட்டுப்படுத்திய செயலா?

இன்றைக்கு நிலைமை என்ன? கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் மூன்றாவது இடம் தமிழகம். விலை மதிப்பில்லாத 15 உயிர்களை இழந்திருக்கிறோம்; 1264 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்; இதில் 30க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். அனைத்துக்கும் மேலாக சிகிச்சை கொடுத்து வந்த மருத்துவர்களில் பத்துப்பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல்லாயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். இன்னும் எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற தரவுகளே தெரியவில்லை.
முதல்வர் பழனிசாமி.
முதல்-அமைச்சர் எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நான் தடை போட நினைப்பதாகச் சொல்லி இருக்கிறார் முதல்வர். இந்த அரசு எடுத்த எந்த நடவடிக்கைக்கும் நான் தடையாக இருந்தது இல்லை. “ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அனைத்துக்கும் உறுதுணையாக இருப்பேன்” என்றுதான் அன்றும் சொன்னேன்; இன்றும் சொல்கிறேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தால் தானே ஆதரிக்க முடியும்? அரைகுறை நடவடிக்கைகளை நான் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?

ரேப்பிட் டெஸ்ட் பரிசோதனைக் கருவிகள் மார்ச் 9-ந் தேதி வந்துவிடும் என்றார், 10-ந் தேதியே ஒரு லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்துவிடுவோம் என்றார். அப்படி எந்த பரிசோதனையும் நடக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து 13 ஆயிரம் கோடி பணம் கேட்டார். வந்ததோ வெறும் 800 கோடி.

தமிழக அரசு கேட்ட நிதியைத் தர வேண்டும் என்று மூன்று அறிக்கைகளை நான் வெளியிட்டுள்ளேன். பிரதமர் நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இதனைக் கோரிக்கையாக வைத்து வலியுறுத்தினார்; எழுத்து மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளார். இதை எல்லாம் முதல்வர் மறந்து விட்டாரா? மறைக்கிறாரா?

கொரோனாவில் நான் அரசியல் செய்வதாக இருந்தால், முதல்-அமைச்சருக்கு எந்த ஆலோசனையும் சொல்லாமல் வாய்மூடி இருந்திருக்க வேண்டும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியை ஒதுக்காமல் இருந்திருக்க வேண்டும், தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்காமல் மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். இப்படி எல்லாம் நான் இருந்தால்தான் அரசியல் செய்வதாக அர்த்தம்.

மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கி, உதவிகள் செய்து, மத்திய அரசிடம் வாதாடுவதற்குப் பேர் அரசியல் அல்ல; அக்கறை. தமிழ்நாட்டு மக்கள் மீதான தணியாத அக்கறையில்தான் தி.மு.க. எப்போதும் செயல்படுகிறது.

மீண்டும் முதல்- அமைச்சருக்குச் சொல்வது, அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல! நோயை மறைக்காதீர்கள்; பொய்க் கணக்குக்கான தவறான புள்ளிவிவரங்களை அள்ளி வீசாதீர்கள். பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். உபகரணங்கள், கருவிகளை உடனடியாக வாங்குங்கள். பிழையான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் தராதீர்கள். எப்படியாவது மக்களைக் காப்பாற்றுங்கள்.

நோயை மறைப்பது என்பது உங்களை ஏமாற்றிக் கொள்வது மட்டுமல்ல; நாட்டு மக்களை ஏமாற்றுவதுமாகும்.

உங்களது அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக் கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்