Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காற்றில் பறந்த ஊரடங்கு உத்தரவு: திருச்சி பெரிய கடைவீதியில் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி

ஏப்ரல் 18, 2020 09:40

திருச்சி: ஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்கவிடும் விதமாகவும், சமூக விலகலை கடைபிடிக்காமலும், திருச்சி பெரிய கடைவீதியில் பொதுமக்கள் சர்வசாதாரணமாக சுற்றி வந்தனர். இதனால் மீண்டும் போக்குவரத்து நெருக்கடிஏற்பட்டது.

கொரோனாவை வேரோடும், வேரடி மண்ணோடும் இந்திய மண்ணில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவை பிறப்பித்து உள்ளன. ஊரடங்கை மீறி தேவை இல்லாமல் வெளியில் நடமாடினால் வாகனம் பறிமுதல் வழக்குப்பதிவு என போலீசார் எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவல் என்ற நிலைக்கு செல்லாமல் கட்டுக்குள் உள்ளது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக குறையவில்லை. பொதுமக்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வசதியாக காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கடைகள் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

இந்த நேரத்தில் பொருட்கள் வாங்க வெளியில் வருவதற்கு பல விதிமுறைகள் உள்ளன. ஆனால் பொதுமக்கள் இந்த விதிமுறைகள், கட்டுப்பாடுகளை எல்லாம் மறந்து சர்வசாதாரணமாக சாலைகளில் நடமாடுவது அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருச்சி காந்திமார்க்கெட் மூடப்பட்டு விட்டாலும் அதனை சுற்றியுள்ள வெங்காய மண்டி பழக்கடைகள், மளிகை கடைகள் பெரிய கடைவீதியில் உள்ள மளிகை கடைகள், நாட்டு மருந்து கடைகள் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டும் உரசிக்கொண்டும் நின்றனர்.

பெரிய கடை வீதியில் கார் ஆட்டோக்கள் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று கொண்டே இருந்ததால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்கவிடும் விதமாக மக்கள் குடும்பம் குடும்பமாக பொருட்கள் வாங்க வந்ததால் பொறுமை இழந்த போலீசார் அங்கு வந்து ஒலிபெருக்கி மூலம் அவர்களை எச்சரிக்கை செய்தனர். அதன் பின்னரே நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது. திருச்சி, பாலக்கரை, எடத்தெரு, தஞ்சாவூர் சாலை ஆகிய இடங்களிலும் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் அதிக அளவில் வாகனங்களில் சென்றனர்.

தலைப்புச்செய்திகள்