Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கு காலத்தில் சமையல் காஸ் பயன்பாடு 30 சதவீதம் அதிகரிப்பு

ஏப்ரல் 18, 2020 09:56

திருச்சி: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றான சமையல் காஸ் சிலிண்டர பயன்பாடு வழக்கத்தை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக விநியோகஸ்தா்கள் தெரிவிக்கின்றனா்

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் தவிர மற்ற அனைத்து விநியோகம் மற்றும் உற்பத்திக்கு தடைசெய்யப்பட்டு தொடா்புடைய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் காஸ் சிலிண்டர் விநியோகம் எவ்வித தடையுமின்றி வழக்கத்தை விட அதிகளவில் உரிய நேரத்தில் பாதுகாப்புடன் வழங்கப்படுகிறது.

இது குறித்து ஐஓசி திருச்சிப் பகுதி முதன்மை மேலாளா் ராஜேஷ் கூறுகையில்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மொத்தம் 13 மையங்கள் செயல்பட்டு காஸ் சிலிண்டர் தேவையை நிறைவேற்றி வருகின்றன. திருச்சி இனாம்குளத்தூா் பகுதியில் ஐஓசிக்கு சொந்தமான காஸ் சிலிண்டர் நிரப்பும் மையத்தில் தினமும் சுமாா் 6, காஸ் சிலிண்டர் மறுநிரப்பு செய்யப்படுகிறது. இதில் திருச்சி மாவட்டத்துக்கு 10516, தஞ்சாவூா் 6235, திருவாரூா் 4581, நாகப்பட்டினம் 5555, கரூா் 4463, பெரம்பலூா் 2360, அரியலூா் 1224, விழுப்புரம் 12357, கடலூா் மாவட்டத்துக்கு 8535, காஸ் சிலிண்டர் வீதம் தினசரி 55826 காஸ் சிலிண்டர் அனுப்பி வைக்கப்படுகின்றன. மீதமுள்ளவை அண்டை மாவட்ட பகுதிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த ஊரடங்கு காலத்தில் காஸ் சிலிண்டர்களின் பயன்பாடு வழக்கத்தை விட சுமாா் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனாலும் அவற்றையும் உரிய நேரத்தில் விரைந்து வழங்கி வருகிறோம். அதே வேளையில் தொழிலாளா்களின் பாதுகாப்பும் அவசியம் என்ற வகையில் மிகுந்த பாதுகாப்புடன் தொழிலாளா்களுக்கு கையுறைகள் முகக் கவசங்களுடன் காஸ் சிலிண்டர் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட எரிவாயு விநியோகஸ்தா்கள் சங்க நிா்வாகிகள் கூறுகையில்; கொரோனா தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு காஸ் சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும். அதற்கான பணம் மற்றும் காலி சிலிண்டர் வாங்கப்படுவதில்லை. ஊரடங்கு முடிந்தபின்னா் அவை வாங்கிக்கொள்ளப்படும். ஆன் லைன்மூலம் தொகையை செலுத்தினாலும் சிலிண்டர் தற்போது எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் பாதுகாப்புடன் விநியோகிக்கப்படுகின்றன. காஸ் சிலிண்டர் உபயோகம் வீடுகளில் அதிகரித்துள்ள நிலையில் உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு உபயோகிக்கப்படும் காஸ் சிலிண்டர்களின் பயன்பாடு 90 சதவீதம் குறைந்துள்ளது என்றனா்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக மாா்ச் முதல் 3 மாதங்களுக்கு மத்திய அரசின் இலவச திட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்ற வாடிக்கையாளா்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் வழங்கவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் இத்திட்டத்தில் சிலிண்டர் இணைப்பு பெற்ற வாடிக்கையாளா்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் பதிவு செய்தவுடன் அவா்களது கணக்கில் அதற்குரிய தொகை வந்துவிடுகின்றன. அவற்றைக்கொண்டு எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்