Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.1,63,304 கோடி காலி: ஆனாலும் 40,000 பேருக்கு வேலை உறுதி: நெகிழ வைக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம்

ஏப்ரல் 18, 2020 10:05

கொரோனா வைரஸ் உலக பணக்காரர்கள் முதல் பாமர மக்கள் வரை எல்லோரையும் பாதித்து இருக்கிறது. மறு பக்கம் ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்கள், புதிதாக படித்து முடித்துவிட்டு வேலை தேடி அலைபவர்கள் என எல்லோரையும் வேலை தேடி அலைய வைத்திருக்கிறது இந்த கொரோனா. இந்த நெருக்கடியான சூழலில், டி.சி.எஸ். ஒரு நல்ல காரியத்தைச் செய்து மக்கள் மனதை வென்று இருக்கிறது.

கடந்த ஜனவரி 16 அன்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 8,41,284 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று வர்த்தகம் நிறைவடைந்த பிறகு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 6,77,980 கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது.
இதை ஆங்கிலத்தில் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் என்போம். அப்படி என்றால் என்ன என்பதைப் பார்த்து விடுவோம். பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனங்கள் வர்த்தகமாவதைப் பார்த்து இருப்போம். அப்படி வர்த்தகம் ஆகும் பங்குகளுக்கு ஒரு விலை இருக்கும். மொத்த பங்குகள்  ஒரு பங்கின் விலை, மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஜனவரி 16 அன்று 2,242 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஆனால், இன்று அதே டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன பங்கின் விலை 1,806 ரூபாய்க்கு சரிந்து இருக்கிறது எனவே, சந்தை மதிப்பு பயங்கரமாக சரிந்துவிட்டது.
இப்படி டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலை சரிந்து 1.63 லட்சம் கோடி ரூபாய்க்கு சந்தை மதிப்பு சரிந்து இருக்கின்ற போதிலும், டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலைக்குத் தேர்வான இளைஞர்களுக்கு, சொன்ன படி வேலை கொடுப்போம் என உறுதி அளித்து இருக்கிறார்கள்.
இந்த டாடா குழும கம்பெனி, தேர்வு செய்த 40,000 இளைஞர்களையும் வேலைக்கு எடுத்துக் கொள்ளும் எனச் சொல்லி இருக்கிறார்கள். அதே நேரத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றும் பழைய ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கமாட்டோம் எனவும் சொல்லி இருக்கிறார்கள். இதை டி.சி.எஸ். கம்பெனியின் சி.இ.ஓ.வே உறுதி செய்து இருக்கிறார்.

ஆனால், பழைய ஊழியர்களுக்கு ஒரே ஒரு கெட்ட செய்தி என்றால் அது சம்பள உயர்வு மறுத்தது தான். மற்ற படி, இந்த கொரோனா வைரஸ் காலத்திலும், தனக்கு சுமார் 1.63 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு சரிந்து இருக்கும் காலத்திலும், 40,000 பேருக்கு கொடுத்த வேலை வாய்ப்பு உறுதி செய்வது உண்மையாகவே பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.

தலைப்புச்செய்திகள்