Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 ஸ்டார் ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் கடன் இருக்கிறது: தமிழக அரசுக்கு 3 கோரிக்கை வைத்த லீ மெரிடியன் அதிபர்

ஏப்ரல் 18, 2020 10:09

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் லாக்-டவுனில் உள்ளதால் தொழில்துறை கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்த வகையில் ஹோட்டல் தொழில் துறைக்கு கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் என்ன? என்பது குறித்தும் அரசுக்கு 3 கோரிக்கைகளை வைத்து லீ மெரீடியன் 5 நட்சத்திர விடுதி அதிபர் பழனி ஜி.பெரியசாமி தெரிவித்ததாவது:

கொரோனா வைரஸ் தாக்கத்தால் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டதோ இல்லையோ, ஆனால், ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறைக்கு மிக பலத்த அடி விழுந்துள்ளது. வரலாறு காணாத அளவில் இந்த ஹோட்டல் தொழில் தற்போது சரிவை கண்டுள்ளது. இந்தியா முழுவதும் 2.5 கோடி பேர் ஹோட்டல்களை நம்பி நேரடியாகவும், 6.5 கோடி பேர் மறைமுகமாகவும் ஹோட்டல்களை சார்ந்து வருவாய் ஈட்டி வருகின்றனர். மொத்தம் 9 கோடி பேர் என வைத்துக்கொள்ளுங்கள். இவர்கள் அனைவரின் நிலையை நினைத்தால் கவலையாக உள்ளது.

தற்போது லாக்-டவுன் உள்ளதால் சென்னை உட்பட எந்த நகரத்திலும் 5 நட்சத்திர விடுதிகள் முழுமையாக செயல்படவில்லை. புதிதாக ரிசர்வேஷன்கள் கிடையாது. ரெஸ்டாரெண்ட்கள் செயல்படுவதில்லை. ஏற்கனவே ஒப்பந்தம் செய்து தங்கியிருக்க கூடிய நான்கு அல்லது ஐந்து அறைகளுக்காக ஒரு 50 ஊழியர்களை மட்டும் எங்கள் லீ மெரீடியன் நட்சத்திர விடுதியில் பணி அமர்த்தியுள்ளோம். மற்றபடி மற்ற அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

கொரோனாவால் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு ‘ஹை வோல்ட் ஷாக்’ என்று கூறலாம். அந்தளவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளது. 5 நட்சத்திர விடுதி நடத்துபவர்களுக்கும் வங்கிகளில் கடன் இருக்கிறது. இதனால் வங்கி கடன் தவணையை செலுத்த 6 மாத காலம் அவகாசம் கொடுத்தால் உதவியாக இருக்கும். இதேபோல் லாக்டவுன் முடிந்தபின்னர் குறைந்தது 3 மாதகாலத்திற்கு ஹோட்டல் நிறுவனங்களிடம் இருந்து வரி வசூலிக்கக் கூடாது என்பது எனது கோரிக்கை. அரசு வரிச்சலுகை தர வேண்டும்.

இப்போது ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது 6 முதல் 7 மாதங்கள் ஆகக்கூடும். அதன் பின்னரே இயல்பு நிலைக்கு ஹோட்டல் துறை வரும். அதுவரை கடும் நெருக்கடிகளையும், பொருளாதார பிரச்சனைகளையும் சந்தித்தே ஆகவேண்டும். அனைத்தையும் சந்தித்துதான் இந்த ஹோட்டல்களை இயக்க வேண்டும்.

நான் இந்த நேரத்தில் 3 கோரிக்கைகளை முன்வைக்கிறேன். வங்கி கடன் தவணை செலுத்த 6 மாதகாலம் அவகாசம், வரிச்சலுகை, மேலை நாடுகளை போல் ஹோட்டல் தொழிலுக்கு மானியம். இதை மூன்றையும் அரசு செய்துகொடுத்தால் உதவிகரமாக இருக்கும்.
இவ்வாறு லீ மெரிடியன் அதிபர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்