Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தொற்று குறித்து முதல்வர் பொய் பேசுகிறார்: வி.சி.க. தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு

ஏப்ரல் 18, 2020 11:27

சென்னை: “தமிழ்நாட்டில் நிலவும் கொரோனா தொற்று குறித்து முதல்வர் சித்தரித்துப் பொய் பேசுகிறார்,” என்று  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 1,323 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6 கோடிக்கும் அதிகமாக மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 26 ஆயிரம் பேருக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதற்கிடையே கொரோனா தொடர்பாக முதல்வர் பழனிசாமி கூறும் கருத்துகள், தலைமைச் செயலர் சண்முகம் கூறும் கருத்துகள் முரண்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சமூகப்பரவலை ஒத்திப் போடுவதற்கு மட்டுமே இந்த முழு அடைப்பு உதவும். பரவலாகப் பரிசோதனை செய்து கொரோனா தொற்று இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களைத் தனிமைப்படுத்திச் சிகிச்சை அளிப்பதன் மூலமே இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அருகாமையில் உள்ள கேரள மாநிலத்தில் அப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலோ செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே உள்ளது. 

அதற்கான உபகரணங்கள் கையிருப்பு உள்ளதா? என்பதைப் பற்றி வெளிப்படையான விவரங்களைத் தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. சுகாதாரத்துறை செயலாளர் 14,000 பரிசோதனைக் (ஆர்.டி.பி.சி.ஆர்.) கருவிகள் இருப்பதாகச் சொன்னார். ஒரு நாள் கழித்து தலைமைச்செயலாளர் 24 ஆயிரம் சோதனைக் கருவிகள் இருப்பதாகச் சொன்னார். அதற்கும் அடுத்தநாள் சுகாதாரத்துறை அமைச்சர் 1,35,000 கருவிகளுக்காக ஜனவரி மாதத்திலேயே ஆர்டர் செய்திருப்பதாகவும் தற்போது 60,000 கருவிகள் கையிருப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இவை எல்லாமே ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளன.

ஆர்டிபிசிஆர்- பரிசோதனைகள் மூலமாக மட்டுமே கொரோனா தொற்றைத் துல்லியமாக உறுதிப்படுத்த முடியும். ஒரு கருவியை (கிட்) ஒரு முறை தான் பயன்படுத்த முடியும். தமிழ்நாட்டில் இதுவரை 17 மையங்கள் மட்டுமே ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு மையத்தில் நாளொன்றுக்குப் பரிசோதனைகள் அதிகபட்சமாக 250 இதிலிருந்து 300 வரை தான் செய்ய முடியுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால் நாள் ஒன்றுக்கு 17 மையங்களிலும் சுமார் 5,000 சாம்பிள்கள் மட்டுமே சோதிக்க முடியும். இந்நிலையில்  அரசு வெளியிடுகிற புள்ளிவிவரங்கள் மக்கள் நம்பக்கூடியவையாக இல்லை.

நமது மாநிலத்தில் ‘ரெட் ஸ்பாட்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்தி அங்கே பரவலாக விரைவு சோதனை முறைகள் (ராபிட் டெஸ்டிங்) மூலமாகச் சோதிக்க வேண்டும். அவற்றில், ' பாசிட்டிவ் ' என நோய்த்தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு 'ஆர்.டி.பி.சி.ஆர்.' மூலமாகப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். இதுதான் கொரோனா தொற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான ஒரேவழியாகும் என மருத்துவ வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இந்த வழியை தமிழக அரசு கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை.

'பிபிஇ கிட்' போதுமான அளவு வழங்கப்படவில்லை என்பதே மருத்துவர்களும், பயிற்சி மருத்துவர்களும், செவிலியர்களும் , துப்புரவுப் பணியாளர்களும் தற்போது கூறுகிற புகாராக உள்ளது. இந்த நிலையில், 'சிறப்பாக செயல்படுகிறோம்' என்று வார்த்தைகளை வைத்து மக்களை குழப்பும் வேலையில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பது வேதனை அளிக்கிறது. போதிய தடுப்பு மற்றும் சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகள் இல்லாமலேயே நோய் குறைந்து விட்டது என்று பொய்யான ஒரு சித்தரிப்பை முதல்வர் ஏற்படுத்துவது தமிழக மக்களை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் தள்ளிவிடும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்